ஆஸ்கார் வென்ற RRR படத்தின் நாட்டு கூத்து பாடலுக்கு நடன இயக்குனராக செயல்பட்டவர் பிரேம்
பிரபல நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் பெரிய பட்ஜெட் திரைப்படம் தான் கங்குவா. நெருப்புடா.. என்று கூறுவது போல, நெருப்பில் இருந்து பிறந்தவன் என்ற அர்த்தம் கொண்ட சொல் தான் கங்குவா. இன்னும் ஷூட்டிங் கூட முடிவடையாத நிலையில், இந்த படம் ஏற்கனவே பெரிய அளவில் வியாபாரம் ஆகி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கிறது.
அனுதினமும் இந்த படம் குறித்த ஏதோ ஒரு தகவல், சூர்யாவின் ரசிகர்களுக்கு விதவிதமாக "ட்ரீட்" வைத்து வரும் நிலையில், கங்குவா குறித்த மிகமுக்கிய தகவல் இப்பொது வெளியாகியுள்ளது. 500க்கும் அதிகமான நடன கலைஞர்களை கொண்டு, பிரம்மாண்டமாக ஒரு பாடல் காட்சி தயாராகி உள்ளது. அதுவும் அண்மையில் ஆஸ்கார் விருது வென்ற நாட்டு கூத்து பாடலுக்கு நடன அமைப்பை மேற்கொண்ட நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் இந்த பாடலை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே கொடைக்கானலில் இந்த படத்திற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. கங்குவா படத்தில் வரும் ஒரு சண்டை காட்சியும், சூர்யா தம்பி கார்த்தியின் ஜப்பான் பட சண்டை காட்சி ஒன்றும் சென்ற வாரம் ஒரே இடத்தில் படமாக்கப்பட்டது.
கங்குவா படத்தை பொறுத்தவரை தற்போது அந்த பிரம்மாண்ட பாடல் காட்சியும் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கொடைக்கானல் சென்றுள்ளது கங்குவா படக்குழு. இது இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது, சில தினங்களுக்கு முன்பு சூர்யா வித்தியாசமான ஒரு கெட்டப்பில் வலம்வரும் ஒரு புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டானது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவன சார்பில் தயாராகும் கங்குவா படம் 3D வடிவில் விரைவில் மக்களின் பார்வைக்கு திரையரங்குகளில் வெளியாகும்.
சூர்யாவின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் இது என்ற ஒரு தகவலும் பரவலாக பரவி வருகின்றது. மேலும் சூர்யா இந்த படத்தை முடித்த பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் பட பணிகளில் ஈடுபடுவார் என்று முன்பு கூறப்பட்டது.
ஆனால் வெற்றிமாறன், தனது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை முடிக்க சிறுது காலம் பிடிக்கும் என்பதால் இடைப்பட்ட இடைவெளியில் மீண்டும் சூரரை போற்று இயக்குனர் சுதாவுடன் ஒரு படத்தில் சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.