Ethirneechal Marimuthu passed away : எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து இன்று காலை திடீரென காலமானார்.
தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர் மாரிமுத்து. இதையடுத்து பரியேறும் பெருமாள் முதல் ஜெயிலர் வரை ஏராளமான படங்களில் குணச்சித்திர நடிகராக கலக்கி வந்த மாரிமுத்து, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வருவதற்கு மாரிமுத்துவின் கதாபாத்திரம் தான் முக்கிய காரணம். அதுமட்டுமின்றி ஆதி குணசேகரனாக இவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி சக்கைப்போடு போட்டன.. அதிலும் இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியது.
இதையும் படியுங்கள்... 1500 ரூபாயில் துவங்கி.. இன்று எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டும் மாரிமுத்து வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த அளவுக்கு மாரிமுத்துவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது எதிர்நீச்சல் சீரியல். அந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையி, அதன் டப்பிங்கிற்காக இன்று காலை டப்பிங் ஸ்டூடியோ வந்த மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள சூர்யா என்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவித்தனர். அவருக்கு வயது 57.
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீரென மரணமடைந்து இருப்பது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் உலுக்கி உள்ளது. குறிப்பாக சின்னத்திரை வட்டாரத்தில் மாரிமுத்துவின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு தேனியில் உள்ள அவரது சொந்த ஊரில் வைத்து நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் தந்த மவுசு... ஜெயிலர், கங்குவா என சினிமாவிலும் கலக்கும் மாரிமுத்து இத்தனை படங்களை இயக்கி உள்ளாரா?