கமல் 60 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அதிரடி பேச்சு !! எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்ததால் பரபரப்பு !!

By Selvanayagam PFirst Published Nov 18, 2019, 6:21 AM IST
Highlights

“2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று பேசிய நடிகர்  ரஜினிகாந்த்,  4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது, நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால சினிமா கலை பயணத்தை கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பாடல்களை பாடினார்.


.
விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, வடிவேலு, விக்ரம் பிரபு, நடிகைகள் லதா, ஸ்ரீபிரியா, மீனா, ரேகா, ராதா, அம்பிகா, மனிஷா கொய்ராலா, தமன்னா, லிசி, குட்டி பத்மினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர், திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் பரமக்குடியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்குவதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அதற்கான காசோலையை அவருடன் இணைந்து ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் வழங்கினர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி வர முடியாது. 60 ஆண்டு கலை பயணம் சாதாரண விஷயமல்ல. அவர் செய்த தியாகங்கள் ஏராளம். நானும் கூலியாக கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் கமல்ஹாசன் பட்ட கஷ்டங்களை ஒப்பிடுகையில் சாதாரணம் என்றார்.கமல்ஹாசன் நடிப்பை என்னவென்று சொல்வது? அவரது நடிப்பை பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறேன் என்றார்.


தான் ஆராய்ந்த விஷயத்தை மக்களுக்கு சொல்ல நினைப்பார். ஆனால் அவரது பேச்சு புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை என்ன சொல்வது?. இந்த ரஜினிக்கே அது புரியும்போது எல்லாருக்குமே புரியும். தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்றார்.

எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள் என தெரிவித்தார்.

“2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர்  ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று ரஜினிகாந்த் பொடி வைத்துப் பேசினார்.

click me!