vignesh shivan : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாரா தான் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது நடிகை நயன்தாராவுக்கும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் கடந்தாண்டும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நானும் ரவுடி தான் படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து பணியாற்றிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் நடிகை நயன்தாரா விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். 2 ஆண்டுகளாக தயாராகி வந்த இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
முக்கோண காதல் கதையம்சத்துடன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக வெளியாகி உள்ள இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்திற்கு கிடைத்து வரும் பாசிடிவ் விமர்சனங்களால் படக்குழுவும், இப்படத்தின் தயாரிப்பாளர்களான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்களாம்.
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாரா தான் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அவர் கூறியுள்ளதாவது : “அன்புள்ள தங்கமே! இப்போது கண்மணியாக, என் வாழ்க்கையில் ஒரு தூணாக இருப்பதற்கு நன்றி. என் முதுகில் தட்டிக்கொடுத்து எத்தனை முறை நீ எனக்காக இருந்திருக்கிறாய்.
வாழ்க்கையில் நான் ஒவ்வொரு முறை துவண்டு போகும்போதும், செய்வதறியாது நின்ற போதும், என்னை நீ வழிநடத்தி சரியான முடிவுகள் எடுக்க வைத்தாய். இவையெல்லாம் தான் என்னையும் இந்த படத்தையும் முழுமையடையச் செய்தது. நீதான் இந்த படம், இந்த வெற்றியும் உன்னால் தான் கண்மணி.
உன்னை நான் திரையில் பார்க்கும் போது, உன்னிடம் உள்ள சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளேன் என ஒரு இயக்குனராக மகிழ்ச்சி அடைகிறேன். உன்னுடன் பணியாற்றுவது மனதுக்கு இதமானது. நாம் திட்டமிட்டபடி படமும் நன்றாக வந்துள்ளது. காதம்பரிக்கு இணையான கதாபாத்திரம் கொடுத்துள்ளேன். கண்மணி உனக்கு பிடிக்கும் என நம்புகிறேன். எல்லாம் காதலே, நன்றி” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ‘ஆள விடுங்கடா’னு வேகமாக காரில் ஏறிய நடிகை... டயரில் காற்றை புடுங்கிவிட்டு ரசிகர்கள் ரகளை செய்ததால் பரபரப்பு