அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை வனப்பகுதியில் நடந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் கேப்டன் மில்லர் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே உள்ள வனப்பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், அங்கு படப்பிடிப்பு நடத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு அருகில் ஷூட்டிங் நடத்தப்படுவதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனால் படப்பிடிப்பை அங்கு நடத்த தடைவிதிக்குமாறும் கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் புகார் கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்.. கணவருக்காக மதம் மாறினாரா 'குக் வித் கோமாளி' மணிமேகலை.. 'லவ் ஜிகாத்' உண்மை என்ன?
குறிப்பாக படப்பிடிப்பின் போது அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதேபோல் வெடிகுண்டுகள் அதிக சத்ததுடன் வெடிக்கப்படுவதாலும் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ள அவர், செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் ஒன்றை படத்திற்காக அமைக்கும் போது அந்த கால்வாய் சேதமடைந்துள்ளதாகவும், இதனால் அதிலிருந்து 15 குளங்கள் நீர்வரத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
புகார் கொடுத்த பின்னரும் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்படுவதாகவும், வனத்துறையினரிடம் அனுமதி பெற்றுவிட்டீர்களா என கேட்டால் மேலிடத்தில் இருந்து அனுமதி வாங்கிவிட்டதாக படக்குழுவினர் கூறுவதாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறைக்கு இதுகுறித்து தொடர்ந்து புகார் வந்துள்ளதை அடுத்து, அவர்கள் இதுகுறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. விஜய் பட ஹீரோயின்களின் கவர்ச்சி நடனத்துடன் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் திருவிழா - அந்த 2 பேர் யார் தெரியுமா?