SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சதீஷ் நாகராஜன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ்வாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது.. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி அதேசமயம் நிஜத்தில் நடந்த நிகழ்வுகளையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படம் பற்றி தயாரிப்பாளர் சதீஷ் நாகராஜன் கூறும்போது, “என்னுடைய தாத்தா பி.எஸ் மூர்த்தி கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக இருந்தவர். தமிழில் போலீஸ்காரன் மகள், மாலையிட்ட மங்கை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். நவஜீவனா என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்றவர். அதனால் இயல்பாகவே சினிமாவில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.
என்னுடைய நண்பர் ஸ்ரீதர் வெங்கடேசனும் நானும் இந்த படத்தின் கதை குறித்து விவாதித்தபோது இந்த வித்தியாசமான முயற்சியை நாமே துவங்கலாம் என்கிற எண்ணத்தில் தான் இந்த படத்தை தயாரித்துள்ளோம்.. இறப்பு என்பது பயமுறுத்த கூடியது என்றாலும் அது கம்பீரமானது என்பதை இந்த படத்தில் கூறியுள்ளோம்” என்கிறார்.
கதாசிரியர் ஸ்ரீதர் வெங்கடேசன் படம் பற்றி கூறும்போது, “உண்மை சம்பவங்களையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்தப்படத்தை உருவாக்கியுளோம். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் படத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். இதுவரை இங்கே இறப்பு என்கிற விஷயத்தைப் பற்றி பேசும்போது எமன் என்கிற ஒரு கதாபாத்திரம் மூலமாகவே பேசியிருக்கிறார்கள். முதன்முறையாக இறப்பே ஒரு கதாபாத்திரமாக மனித உருவில் மாறி பேசினால் எப்படி இருக்கும் என்கிற புதிய முயற்சிதான் இந்த படம்”.
இந்த படத்தில் காதல், அம்மா, குழந்தை, நட்பு என நான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு கதைகளுடன் இறப்பு எப்படி தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை ஹைபர்லிங்க் முறையில் கூறியுள்ளோம். இந்த படத்தின் கதை பற்றி சந்தோஷ் பிரதாப் குறித்து சொன்னபோது, இது புதிய முயற்சியாக இருக்கிறதே என ஆச்சரியப்பட்டு உடனே ஒப்புக்கொண்டு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சாய் ஜீவிதா இறப்பு பற்றிய காட்சியில் மிகுந்த துணிச்சலாக நடித்துள்ளார்” என கூறியுள்ளார்.
இந்தப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப்படம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.