பட வாய்ப்புகள் கணிசமாக குறைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் பாவா லட்சுமணன் தனக்கு உதவி நடிகர் குறித்து உருக்கமாக பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் பாவா லட்சுமணன். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு இவர் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகள் மேனஜராக பணியாற்றி உள்ளார். அந்த காலக்கட்டத்தில் பல படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் மாயி படத்தில் அவர் நடித்த போது மிகவும் பிரபலமானார். மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்வது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும், அந்த காட்சியில் பாவா லட்சுமணன் பேசும் வாமா மின்னல் என்ற காமெடி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
மேலும் ஆனந்தம் படத்தில் பாவா லட்சுமணன் கேரக்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், கோவில், வின்னர், பம்பரக் கண்ணாலே, வெடி, பாண்டிய நாடு, கத்திச்சண்டை என பல படங்களில் நடித்தார். இவர் தமிழில் கடைசியாக ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே சர்க்கரை நோய் பாதிப்பால் பாவா லட்சுமணின் கால் விரல் அகற்றப்பட்டது.
இதனால் பட வாய்ப்புகளும் கணிசமாக குறைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பாவா லட்சுமணன் பேட்டியளித்திருந்தார். அதில் பேசிய அவர் நடிகர் ஜீவா தனக்கு இப்போது மாதந்தோறும் ரூ.15,000 அனுப்பி உதவி செய்து வருவதாக தெரிவித்தார்..
இதுகுறித்து பேசிய அவர், "நான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஜீவா சிறு பையனாக இருந்தார். அப்போது அவர் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே நான் அவரை பார்த்திருக்கிறேன். அப்போது இருந்தே நான் அவர்களுடைய குடும்ப நிறுவனத்தில் வேலை பார்த்ததால் என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது.
ஒருகட்டத்தில் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், ஜீவா எனக்கு மாதம் ரூ.15,000 பணம் அனுப்ப தொடங்கினார். இப்போது வரைக்கும் அவர் பணம் அனுப்பி வருகிறார். உதவி வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டது கூட இல்லை. ஆனால் அவராகவே எனக்கு பணம் அனுப்பி வருகிறார்.
மேலும் நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஆர்.பி சவுத்ரி சார் தான் எனக்கு ஒரு பெரும் தொகையை அனுப்பி மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்ள சொன்னார். நமது நிறுவனத்திற்காக உழைத்திருக்கிறாரே என்று அவர்களாகவே இந்த உதவியை செய்து வருகின்றனர். நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது இயக்குனர் விக்ரம, கேபிஒய் பாலா, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் என பலரும் எனக்கு உதவி செய்தனர்” என்று உருக்கமாக பேசி உள்ளார்.