திரைக்கலையின் குரல்வளையை நெறிக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்டம்! திருப்பிப்பெற வலியுறுத்தி சீமான் அறிக்கை!

Published : Jul 05, 2021, 11:27 AM IST
திரைக்கலையின் குரல்வளையை நெறிக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்டம்! திருப்பிப்பெற வலியுறுத்தி சீமான் அறிக்கை!

சுருக்கம்

மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பல கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பல கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் கூறியுள்ளதாவது... "மனித சமுதாயத்தின் மகத்தான மாற்றங்களுக்கான, புரட்சிகரச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த, அறிவியலின் ஆற்றல்மிகு அழகான குழந்தையான திரைத்துறையின் சுதந்திரத்தினைப் பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 ஆனது மத்தியில் ஆளும் பாஜக அரசின் எதேச்சதிகார தொடர் செயல்திட்டத்தின் மற்றுமொரு வெளிப்பாடேயாகும். ஆளும் ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் எதிராக எழும் வெகுசன மக்களின் உரிமைக்குரலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும் திரைக்கலையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட நினைக்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோன்மைப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும், மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமைகளையும் பறிக்கின்ற வகையில், பல்வேறு திருத்த சட்டங்களைக் கொண்டுவந்து இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள குறைந்தபட்ச உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் முற்று முழுதாக முடக்கும் முயற்சியைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. புதிய வேளாண் சட்டங்கள், புதிய துறைமுகச் சட்டங்கள், புதிய மீன்பிடி சட்டங்கள், புதிய மின்சாரச் சட்டங்கள், புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள், தகவல் தொழில்நுட்பத்துறைக்கான புதிய மின்னியல் ஊடக விதிகள், புதிய கல்விக்கொள்கை, புதிய குடியுரிமை திருத்த சட்டம் என்று மக்களுக்கும், மண்ணிற்கும் எதிராகக் கொண்டுவரப்படும் சட்டத் திருத்தங்கள் இந்திய அரசியலமைப்பின் தோற்றத்தையே மாற்றி ஒற்றையாட்சி தன்மையுடையதாகக் கட்டமைக்கிறது. இது தேசிய இனங்களின் இறையாண்மையைச் சிதைப்பதோடு, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், பன்முகத்தன்மைக்கும் பேராபத்தினை விளைவிக்கக்கூடியவையாகும்.

மேலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மட்டுமின்றி எளிய மக்களின் குரலாக ஒலிக்கக்கூடிய சமூக ஊடகங்களின் மீதும் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பல்வேறு தடைகளை விதித்து அவற்றைச் செயல்படவிடாமல் தொடர்ந்து முடக்கி வருகிறது. இந்நிலையில் அரசின் தவறான கொள்கை முடிவுகள் மற்றும் மக்கள் விரோத திட்டங்களைச் சுட்டிக்காட்டும் திரைப்படங்களையும் வெளிவராமல் தடுக்கப் பல்வேறு சூழ்ச்சிகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் தவறான முடிவுகளால் ( Central Board of Film Certification – CBFC) நீக்கப்பட்ட காட்சிகள் குறித்தோ, தடுக்கப்பட்ட படங்கள் குறித்தோ முறையிட இருந்த ஒரே வாய்ப்பான திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை (Film Certification Appellate Tribunal) கலைத்ததன் மூலம் பாஜக அரசு ஏற்கனவே திரைத்துறையின் மீதான தனது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுருந்தது. அதனை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 மூலம் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவினையும் செயலற்ற அமைப்பாக மாற்ற ஒன்றிய அரசு முனைந்துள்ளது.

இவ்வரைவில் பிரிவு 6 (1)-ன் படி இனி திரைப்படத் தணிக்கைக் குழு அனுமதித்த பிறகும் ஒரு திரைப்படத்தின் அனுமதி சான்றிதழில், ஒன்றிய அரசு தன்னிச்சையாக மாற்றங்கள் செய்யவோ, சான்றிதழை ரத்து செய்யவோ, திரைப்படம் வெளியாகாமல் முடக்கவோ முடியும். இது திரைக்கலையின் மூச்சுக்குழலினை நசுக்கும் கொடுஞ்செயலாகும். இச்சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய, மாநில அரசாங்கத்தை, ஆளும் ஆட்சியாளர்களை, பன்னாட்டுப் பெருமுதலாளிகளை விமர்சிக்கவோ, மண்ணின் வளக்கொள்ளைக்கு எதிரான அவர்களது திட்டங்களை அம்பலப்படுத்தவோ கூடிய திரைப்படங்கள் இனி எடுக்க முடியாதபடி படைப்பாளிகளின் கரங்கள் ஒடிக்கப்பட்டு, அவர்களது சமூக அக்கறை மிகுந்த படைப்புகளை முடக்கும் கெடுவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இச்சட்டத் திருத்த வரைவை எதேச்சதிகாரப்போக்கோடு பாஜக அரசு சட்டமாக்க முனைந்தால் அதற்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமும் ஓரணியில் திரண்டு தனது வலுவான எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டுமெனவும், இவ்விவகாரத்தில் திரைத்துறையினருடன் தோளோடு தோளாக நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன். என சீமான் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!