இசைஞானி இளையராஜா இன்று தன்னுடைய 80 வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு, அவருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் மூன்றாம் தேதி என்றாலும், அந்த நாளில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்படுவதால், இசைஞானி தன்னுடைய பிறந்தநாளையே அவருக்காக மாற்றி க்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2-ஆம்தேதி கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் இன்று இளையராஜா தன்னுடைய 80வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளம் மூலமாகவும், நேரில் சந்தித்தும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை போர்த்தி, புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இவருடன் அமைச்சர் கே என் நேரு பொன்முடி ஆகியோரும் நேரில் சென்று இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது