பிரபல காமெடி நடிகரும், இயக்குனருமான மனோபாலாவின் மரணத்திற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், காமெடி நடிகர் என ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம்பிடித்துள்ள... மனோ பாலா கடந்த சில நாட்களாகவே கல்லீரல் பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும், பிரபலங்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரின் மறைவு குறித்து, தகவல் வெளியானதும்... ரஜினி, கமல், கார்த்தி, சூரி, ஜி.எம்.குமார், பாரதி ராஜா, இளைய ராஜா, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் ட்விட்டர் மூலமாகவும், வீடியோ மூலமாகவும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மனோ பாலாவுக்கு என்ன பிரச்சனை? மரணத்திற்கான காரணம் தெரியுமா... வெளியான ஷாக்கிங் தகவல்!
இந்த இரங்கல் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, "திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல் நல குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறந்த இயக்குனராக மட்டுமின்றி அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில், என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு அவர் பாராட்டியது, இந்த தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்... ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.