நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 69.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வந்தவர் மனோபாலா. கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 69. மனோபாலாவின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மனோபாலாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மனோபாலா கடந்த 1979-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதோடு மட்டுமின்றி அப்படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து 1982-ம் ஆண்டே இயக்குனராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் மனோபாலா. தமிழில் அவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆகாய கங்கை. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.
இயக்குனராக மிளிர வேண்டும் என்கிற கனவோடு இருந்த மனோபாலாவுக்கு நடிகராகவே ஜொலிக்க முடிந்தது. அதுவும் இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் மக்களை மகிழ்வித்து வருகின்றன. இவர் நடிகர், இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சில தரமான படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக இவர் தயாரித்த முதல் படமான சதுரங்க வேட்டை பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து அவர் பாம்புசட்டை என்கிற படத்தை தயாரித்தார்.
தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக இருந்து வந்த நடிகர் மனோபாலா, கடந்தாண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையையும் வெளிப்படுத்தினார். அவரின் இந்த எதிர்பாரா மரணம் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... தங்கலான் படப்பிடிப்பில் விபத்து... நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிந்தது