சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற விஜய்யின் பிறந்தநாள் விழாவில் சாகசம் செய்த சிறுவனின் கையில் தீ பற்றி எரிந்ததில் அந்த சிறுவன் காயமடைந்தார்.
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாக நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்றால் தமிழகம் முழுவதும் தடபுடலாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாள் விழா பெரியளவில் கொண்டாடப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் கள்ளக்குறிச்சி சம்பவம் தான். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களை கடந்த வியாழக்கிழமை இரவு நேரில் சந்தித்த விஜய் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர் மன்றத்தினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனால் இன்று விஜய்யின் பிறந்தநாளை பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடவில்லை.
இதையும் படியுங்கள்... Box Office King Vijay : கோலிவுட்டின் ‘கோட்’... தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆனது எப்படி? ஓர் அலசல்
இருப்பினும் அவரின் பேச்சை மீறி ஒரு சில கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. அப்படி விஜய்யின் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியிலேயே ஈசிஆர் சரவணன் சார்பில் நடத்தப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டனர். இதில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் சிறுவர்கள் சாகசம் என மேல தாளங்கள் முழங்க வெகு விமர்சையாக விஜயின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
மேலும் சிறுவர்கள் சாகசம் செய்யும் பொழுது கையில் பெட்ரோல் ஊற்றி எரிய வைத்து ஓடுகள் உடைப்பது உள்ளிட்ட சாகசங்கள் செய்தனர் அப்பொழுது சிறுவன் ஒருவர் கையில் பற்ற வைத்த தீ, ஓடு உடைத்த பின் அணைக்க முடியாமல் அதிகளவு எறிய தொடங்கியது. இதனால் அலறிய அந்த சிறுவன் கையை உதறிய பொழுது அவர் அருகில் பெட்ரோல் வைத்திருந்தவர் மீதும் தீ பற்றி எறிந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவர் கையிலும் பற்றிய தீயை அணைத்து, சிறுவனை மீட்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோலை வாட்டர் கேனில் வாங்குவது சட்டவிரோதம் ஆகும். இந்த நிலையில் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு இந்த சாகசத்தில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற சாகசங்கள் நடத்துவதற்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் நடிகர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள் என தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் விஜய் ரசிகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவனுக்கு தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிறுவன் கையில் தீ பற்றிய சம்பவம் குறித்தான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது
இதையும் படியுங்கள்... விஜய்யின் விஸ்வரூப வளர்ச்சிக்கு வித்திட்ட ரீமேக் படங்கள்... அடேங்கப்பா இத்தனை Remake படங்களில் நடித்துள்ளாரா?