சென்னையில் வரும் டிசம்பர் 30 ம் தேதி முதல், சர்வதேச திரைப்படத் திருவிழா துவங்கி (Chennai Flim Frestival), ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் டிசம்பர் 30 ம் தேதி முதல், சர்வதேச திரைப்படத் திருவிழா துவங்கி, ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 53 நாடுகளைச் சேர்ந்த 121 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், திரைப்படத் திருவிழா தொடர்பாக சென்னை அண்ணாசாலை தயாரிப்பாளர் சங்க கட்டடத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் குழுத் தலைவர் தங்கராஜ்,சென்னையில் வரும் டிசம்பர் 30 ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறவுள்ள, 19ம் ஆண்டு சர்வதேச திரைப்படத் திருவிழாவில் 53 நாடுகளை சேர்ந்த 121 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன என தெரிவித்தார்.
இதில் தமிழ் உட்பட 7 இந்திய மொழிகள் மட்டுமின்றி ஈரானிய , கொரிய , ஜெர்மானிய திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன என்றும், குறிப்பாக சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்ற A hero , when pomegranets howl, yuni , a taxi உள்ளிட்ட பன்மொழிப் படங்கள் திரையிடப்பட உள்ள நிலையில் தொடக்க விழா திரைப்படமாக three floors எனும் இத்தாலிய திரைப்படமும் , இறுதி நாளில் Vortex எனும் பிரெஞ்சு திரைப்படமும் திரையிடப்படுகிறது என்று தெரிவித்தார்.
அதே போல் சென்னை சத்யம் திரையரங்கின் 4 திரைகள் , SDC அண்ணா திரையரங்கின் ஒரு திரை என மொத்தம் 5 திரைகளில் தினம்தோறும் 4 காட்சிகள் திரையிட உள்ளது. தமிழ்த் திரைப்பட பிரிவில் ஐந்து உணர்வுகள் , பூமிகா , கர்ணன் , கட்டில் , கயமை கடக்க , மாறா , ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் , சேத்துமான் , சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் , தேன் , உடன்பிறப்பே என 11 படங்கள் திரையிடப்பட்டு சிறந்த படங்களாக தேர்வாகும் இரு படங்களுக்கு பரிசும் , விருதும் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்
அதன்படி முதல் பரிசுக்கு தேர்வாகும் தமிழ்ப் படத்தின் இயக்குநருக்கு 2லட்சமும் , தயாரிப்பாளருக்கு 1லட்சமும் வழங்கப்பட உள்ளது. மேலும் இரண்டாம் பரிசுக்கு தேர்வாகும் திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 1 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. சிறந்த தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவருக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது. திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் www.icaf.in / chennaiflimfest.com உள்ளிட்ட வலைதளங்களில் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனவும், திரைக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பதிவுக் கட்டணம் 500 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரைப்பட விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.தொடக்க விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.