வீரப்பன் மகள் விஜயலட்சுமி கதையின் நாயகியாக நடித்துள்ள 'மாவீரன் பிள்ளை' படவிழாவில் கலந்து கொண்டு பேசிய பாஜக கட்சி பிரமுகர் எச்.ராஜா மது குறித்து கூறியுள்ள கருத்து, பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று தமிழ்நாட்டை சீரழித்துக்கொண்டு இருக்கும் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அப்படி ஒரு போராட்டாம் மீண்டும் எழுந்தால் தான் மதுவில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும் என்பது குறித்தும் விவசாயிகள் படும் துயரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கு இந்தப்படம் திரையிட்டு காட்டப்பட்டது. இதில் பட விழாவில் கலந்து கொண்டு படம் பார்த்த பின்னர் பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா...
“கலைஞர் ஆட்சியில் தான் தமிழ்நாடு சாராயம் ஓடும் மாநிலமாக மாறியது. இன்றைக்கு டாஸ்மாக்கிற்கு இலக்கு வைத்து செயல்படுகிறார்கள். வருமானம் அதிகமாக காட்டாத 40 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கின்றனர். இதைவிட கேவலமான ஒரு நிகழ்ச்சி வேறு எதுவும் இருக்காது. அதனால் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாகி இருக்கும் இந்த படத்தை, தங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் தடுத்தாலும் பெண்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும். தமிழகம் எந்த அளவுக்கு மதுவால் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று சொன்னால், ஏற்கனவே சகோதரி கனிமொழி தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகம் இருக்கிறார்கள் காரணம் இளைஞர்கள் அனைவரும் குடித்து செத்துப் போய் விடுகிறார்கள் அதனால் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என அவர்களே ஒரு சமயத்தில் குரல் கொடுத்தார்கள்.
அப்படி தங்கள் வசதிக்காக மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தான் இன்று அதிகமாக மது விற்பனை காட்டாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கின்றார்கள். இந்த அராஜகமான சூழ்நிலைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினால் தான் தமிழ்நாடு திருந்தும். பல வருடங்களுக்கு முன்பு நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற விளம்பரம் எங்கு பார்த்தாலும் காட்சியளிக்கும். ஆனால் இன்று குழந்தைப்பேறு வேண்டி மருத்துவமனையை நாடும் அளவுக்கு மதுவால் ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் ஆக்கி வைத்திருக்கிறார்கள். இதில் மாற்றம் வர வேண்டும் என்றால் இது போன்ற படங்கள் பல எண்ணிக்கைகளில் வரவேண்டும்” என்றார். இவர் கூறிய கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.