
பிரபல இயக்குனர் தாமிரா கொரோனா தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்த நிலையில், அவருடனான நினைவுகள் குறித்து பிரபல நடிகரும், பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி, தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் தாமிரா கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் பாரதிராஜா உள்ளிட்ட சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர். 'ரெட்டை சுழி' படத்தில் இயக்குநராக அறிமுகமான இவர், அதைத்தொடர்ந்து நடிகர் சமுத்திரகனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 'ஆண் தேவதை' படத்தை இயக்கியிருந்தார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சிறந்த கருத்தை உள்ளடக்கிய படம் என பாராட்டை பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது தன்னுடைய மூன்றாவது படத்திற்காக கதை எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன் சென்னை அசோக் நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப் பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திரையுலகில் உள்ள அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும் திரை பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரும், நடிகருமான ஆரி, தாமிரா அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "என் முதல் வெள்ளித்திரை பயணத்திற்கு வித்திட்ட இயக்குனர், மாபெரும் கதாசிரியர் மான தாமிரா இன்று நம்முடன் இல்லை என்ற செய்தி எனக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. என்னை மிகவும் மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்த போது எனக்கு சிறிதாக தயக்கம் இருந்தது. அப்போது நீ சரியாக இருக்கும்போது உன்னை யார் மாற்ற இயலும், என்று என் தயக்கத்தைப் போக்கி என்னை பிக்பாஸில் அடி எடுத்து வைக்க ஊக்கப்படுத்தினார். அவர் நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் மறைவினால் அவரது எண்ணங்களில் தோன்றி எத்தனையோ சிறந்த கவிதைகளும் மரணித்து விட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் தாமிரா அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், இன்னும் எத்தனை உயிர்களை கொரோனா காவு வாங்கப் போகிறதோ தெரியவில்லை. உறவுகளே நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.