
சன் தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக பல்வேறு சீரியல்களை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. தற்போது ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’, ‘பாக்கியலட்சுமி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஆகிய தொடர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் அவ்வப்போது முதலிடம் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நிறைவடைந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை மறுஒளிபரப்பு செய்ய விஜய் டிவி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர்கள் அருண் பிரசாத், ரோஷிணி ஹரிப்பிரியன், ஃபரீனா, ரூபா ஸ்ரீ ஆகியோர் நடித்த இந்த தொடர் 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. 1,000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பான இத்தொடர், 2023 பிப்ரவரியில் நிறைவடைந்தது. சில காரணங்களால் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷிணி ஹரிப்பிரியன் சீரியலில் இருந்து விலகி விட நடிகை வினுஷா கண்ணம்மாவாக நடித்து வந்தார்.
தனக்கு குழந்தை பிறக்காது எனச் சொல்லி மருத்துவர் பாரதி அவரது தோழி வெண்பாவால் ஏமாற்றப்பட்டு வருகிறார். இதனால் திருமணம் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கும் பாரதி, கண்ணம்மாவை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். பின்னர் கண்ணம்மா மீது காதலில் விழும் அவர் தனது தாயின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார். கண்ணம்மா கருப்பாக இருப்பதால் பாரதியின் தாயார் அவரை வெறுக்கிறார். பின்னர் கண்ணம்மாவை புரிந்து கொள்ளும் பாரதியின் தாயார், கண்ணம்மாவுடன் ஒன்றாக இணைந்து வாழ்கிறார். இந்த நிலையில் பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகிறது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட கண்ணம்மாவின் நடத்தை மீது பாரதிக்கு சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் கண்ணம்மாவிற்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நான் அப்பா இல்லை என்று பாரதி முடிவு செய்கிறார். நீண்ட இழுபறிக்கப் பின்னர் பாரதிக்கு கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தைகள் தன்னுடைய குழந்தைகள் தான் என்கிற உண்மை தெரிய வருகிறது. கடைசியில் தான் தனது தோழி வெண்பாவால் ஏமாற்றப்பட்ட உண்மையையும் பாரதி அறிந்து கொள்கிறார். அத்துடன் இந்த கதை நிறைவு பெற்றது.
இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சிபு சூரியன் மற்றும் வினுஷாவை வைத்து ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 எடுக்கப்பட்டது. ஆனால் சீசன் 2-வுக்கு முதல் பாகத்தைப் போல பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே 115 எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாவது பாகம் நிறைவு பெற்றிருந்தது. இந்த இரண்டு பாகங்களையும் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்ய விஜய் தொலைக்காட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் ‘பாரதி கண்ணம்மா’ முதல் பாகம் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.