Thalapathy Vijay in Nellai : தளபதி விஜய் திருநெல்வேலியில் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கும் பணிகளை துவங்கியுள்ளார்.
அண்மையில் தனது தளபதி 68 பட பணிகளை ஹைதராபாத்தில் முடித்த தளபதி விஜய் நேற்று முன்தினம் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி சென்றார். அப்பொழுது அவர் கண் கலங்கி நின்ற காட்சி காண்போர் உள்ளங்களை நெகிழச் செய்தது. மேலும் அங்கு குடியிருந்த கூட்டத்தில் இருந்த சில விஷமிகள் அவர் மீது காலனியை எறிந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அண்மையில் பெய்த கன மழை காரணமாக தென் மாவட்டங்கள் பல பெரும் சேதங்களுக்கு உள்ளானது. இதனை அடுத்து அரசும், தன்னார்வலர்களும் இணைந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தளபதி விஜய் அவர்கள் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்பொழுது நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு நெல்லை சென்ற அவருக்கு மக்கள் பெரும் திரளாக கூடி இருந்த உற்சாக வரவேற்பு அளித்தனர். பல நகரங்களில் இருந்து மக்கள் அழைத்துவரப்பட்டு நெல்லையில் தற்பொழுது அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் துவங்கி உள்ளது.
விழா நடக்கும் மண்டபத்தில் தளபதி விஜய் அவர்கள், மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அவர்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொதிகளை அவர் ஒவ்வொருவருக்கும் வழங்கி வருகிறார். அவருடன் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கிறார்.