’இனி தெலுங்கர் ராதாரவிக்கு தமிழ்ப்படங்களில் யாரும் வாய்ப்பு தராதீர்கள்’...எச்சரிக்கும் தன்னுரிமை இயக்கம்...

By Muthurama LingamFirst Published Sep 26, 2019, 6:12 PM IST
Highlights

இதற்கு எதிர்வினையாக, தமிழ்மொழியைப் பேசுவது வீண்.. என நம் தாய்த்தமிழை இழிவாகப் பேசிய ராதாரவி நடித்து வெளிவரும் எந்தப் படத்தையும் தமிழகம் புறக்கணிக்க வேண்டும்.அவரை தமிழ்ப்பட இயக்குநர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கவேண்டும்  என்று தமிழ்த் தன்னுரிமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

’எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. தெலுங்கனின் விழாவை தெலுங்குகாரன்தான் கொண்டாடுகிறான்.இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண்'என்று சர்ச்சையாகப் பேசிய ராதாரவியை இனி தமிழ்ப் படக்களில் யாரும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று என்று தமிழ்த் தன்னுரிமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த வாரம் தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவ்விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி,’எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. தெலுங்கனின் விழாவை தெலுங்குகாரன்தான் கொண்டாடுகிறான். இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண்.தெலுங்கர்கள் இல்லாமல் போனால் தமிழரே வாழ்ந்திருக்க முடியாது, தமிழில் தெலுங்கர்கள் பேசக்கூடாது’என்று மிகவும் சர்ச்சையாகப் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாக, தமிழ்மொழியைப் பேசுவது வீண்.. என நம் தாய்த்தமிழை இழிவாகப் பேசிய ராதாரவி நடித்து வெளிவரும் எந்தப் படத்தையும் தமிழகம் புறக்கணிக்க வேண்டும்.அவரை தமிழ்ப்பட இயக்குநர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கவேண்டும்  என்று தமிழ்த் தன்னுரிமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அவ்வியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’தமிழ்நாட்டிற்கு வந்து வாழ்ந்து செழித்திருப்பவர்களே நம் தமிழரையும் அன்னைத்தமிழ் மொழியையும் தாழ்த்திப் பேசுவது என்பது தொடராக நீளுவது நமக்கு அவமானமாக உள்ளது.இப்பொழுது நடிகர் ராதாரவி என்பவர் தெலுங்கராகிய நாம் “தமிழில் பேசுவது வீண்’ எனப் பேசியுள்ளார். இது தமிழர் மனதில் தீராத துயரத்தை ஏற்படுத்தி விட்டது.இதனை உணர்ந்து திருந்தாத வரையில் அவர் நடித்து வெளிவரும் எல்லாத்திரைப்படங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை தமிழ் மக்களிடையே வைக்கிறோம்.

உலக மக்கள் யாரும் தங்களின் தாய்மொழிப் பற்றினை வெளிக்காட்டிக் கொள்வதும் அதனை புகழ்ந்து பேசிக் கொள்வதும் தவறல்ல. ஆனால் நடிகர் ராதாரவியோ, தனக்கு வாழ்வு புகழ் பொருள் தந்த தமிழ்த் திரைப்படத்துறையில் இருந்து தமிழ் பேசி, நடித்துக் கொண்டே தமிழை பழிப்பது வீண்வேலை.. எனப் பேசி இருப்பது பெரும் கண்டனத்திற்கு உரியது.தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கு மொழி அமைப்பினர் நடத்திய விழா ஒன்றில் பேசிய அவர், தன் தாய்மொழி தெலுங்கு என்று மொழிந்தோடு தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் இல்லாமல் போனால் தமிழரே வாழ்ந்திருக்க முடியாது, தமிழில் தெலுங்கர்கள் பேசக்கூடாது என பேசி இருக்கிறார். அது தமிழர்களிடையே மனக் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. தமிழைப் பழித்து தமிழ்மக்களை அவமானப்படுத்தி விட்டார்.

தமிழைப் பழித்தானை தாய் தடுத்தாலும் விடேன்! என்று முழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் புகழில் வளர்ந்த திராவிட இயக்கங்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.தமிழ்த் திரைப்படத்துறை பல மொழிக்காரர்களையும் தூக்கி வளர்த்து அந்தந்த மாநிலங்களை ஆள அனுப்பி வைத்தது. தெலுங்கு என்டி இராமாராவ், நாகேசுவரராவ்.. கன்னட இராசகுமார், கல்யாண்குமார், மலையாள பிரேம் நசீர், இந்தி என எங்குள்ளவரும் இங்கு வந்து நடித்து பெயர் பெற்றுச் சென்றவர்களே.இங்கும் தமிழருள்ளே தெலுங்கரும் பிற மொழியினரும் ஒன்று கலந்து வாழ்கிறோம். தமிழ் மக்களுக்கு இருக்கும் இந்த பண்பை கூட விளங்கிக் கொள்ள முடியாதவராக ராதாரவி இருப்பது தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இது பொறுப்பற்ற ஒரு பேச்சாகும்.

இதனை அவருக்கு உணர்த்தும் வகையில் இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிக்க யாரும் ராதாரவிக்கு வாய்ப்பளிக்கப் கூடாது என தமிழ்த் திரைப்படத் துறையில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கோரிக்கையாக வைக்கின்றோம். அதையும் மீறி தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பளிக்கப்படுமானால் அத்திரைப்படங்கள் ஓடும் திரைப்பட அரங்குகளில் மறியல் நடத்தப்படும் என்பதை தமிழ்மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்’என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.

click me!