தமிழ் திரையுலகில் தன்னிகரற்ற, எழுத்தாளராக அறியப்படும் ஆரூர் தாஸ்... மறைவிற்கு கண்ணீருடன் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கதை, வசனம் எழுதுவதில் மிகவும் பிரபலமானவர் ஆரூர் தாஸ். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல், 1000திற்கும் அதிகமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 1931-ம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இவர், 1955-ம் ஆண்டு நாட்டியதாரா என்கிற படத்தின் மூலம் உதவி வசனகர்த்தாவாக பணியாற்றி பின்னர் வசன கர்த்தாவாக மாறினார். பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் நேற்று வயது மூப்பு காரணமாக, சென்னை தி.நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார்.
91 வயதாகும் இவரின், இழப்பு கோலிவுட் திரையுலகையே கலங்க வைத்துள்ளது. இவருடைய மறைவு குறித்து அறிந்த முதல்வர் ஸ்டாலின் முதல், ரஜினி, கமல், போன்ற பலர் தங்களின் இரங்கலை தெரிவித்த நிலையில் தற்போது பிரபல குணச்சித்திர நடிகரும்... டப்பிங் ஆர்டிஸ்டுமான எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீருடன் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
இவருடைய இழப்பு குறித்து, எம்.எஸ்.பாஸ்கர் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளதாவது...
தமிழ் ஓய்ந்ததோ? தன்னிகரற்ற எழுத்து சாய்ந்ததோ?
தமிழை தங்கு தடையின்றி, பிழையறப்பேச இந்த எளியவனுக்கு படிப்பித்த என் 'ஆசான்' விண்ணுலகம் சென்றாரோ...?
"டேய்..பாஸ்கரா" என்று என்னை அன்போடு அழைத்த அக்குரலை இனி எப்பிறப்பில் கேட்பேன்?
அரவணைத்தும், கண்டித்தும் என்னை வழி நடத்திய என் குருநாதர் அமரரானாரோ?
இந்நிலையல்ல... எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றி விட்ட ஏணி அவரன்றோ..?
மறக்க இயலுமோ? என் இறுதி மூச்சு உள்ளவரை 'அப்பா' தங்களை மறக்க இயலுமோ?
தாங்கள் பேசாவிட்டாலும் தங்கள் வசனங்கள் காலாகாலத்திற்கும் பேசப்படுமன்றோ..?
மீண்டும் தங்கள் வசனங்களை தாங்கள் சொல்லித்தர தங்கள் முன்பு நின்று தங்கள் சீடன் நான் 'டப்பிங்' பேசுவேனா?
"சென்று வாருங்கள் அப்பா"...
மாதாவின் நிழலில் இளைப்பாற...
கண்ணீருடன்... தங்கள் மாணவன் எம்.எஸ்.பாஸ்கர் என தன்னுடைய அறிக்கையியல் தெரிவித்துள்ளார்.