அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த, மேஜர் ஜெயந்த் உள்ளிட்ட இருராணுவ அதிகாரிகள் மறைவிற்கு நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் ட்விட்டர் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தமிழக ராணுவ அதிகாரி ஜெயந்தின் மறைவுக்கு காலை முதலே அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், உலக நாயகன் கமலஹாசன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த இரங்கல் குறிப்பில் அவர் கூறியுள்ளதாவது, "அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் ஜெயந்த் உள்ளிட்ட இரு ராணுவ அதிகாரிகள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேஜர் ஜெயந்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
அதேபோல் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் தன்னுடைய இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தார். அதில் "அருணாச்சலப் பிரதேசத்தில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தின் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயத் உயிரிழந்தது செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ராணுவ வீரர் மேஜர் ஜெயந்திக்கு, எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் நாட்டு மக்களுக்கும் தமிழக அரசு சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து மேஜர் ஜெயந்தின் மறைவிற்கு பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயந்தியின் உடல் நாளை டெல்லியில் இருந்து தனி விமானத்தின் மூலம் அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள ஜெயமங்கலத்தில் நல்லடக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ராணுவ அதிகாரி ஜெயத்துக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகும் நிலையில், இன்னும் குழந்தை இல்லை என தெரிகிறது. 33 வயதாகும் இவர், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.