'அசுரன்' படத்திற்கு கிடைத்த தேசிய விருது... உருக்கமாக நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்..!

By manimegalai aFirst Published Mar 23, 2021, 7:14 PM IST
Highlights

இந்நிலையில் அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்த நிலையில் அசுரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக, தேசிய விருதை பெற்றார். இதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2019ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 100 நாட்களை கடந்து ஓடிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. 

இந்நிலையில் அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்த நிலையில் அசுரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக, தேசிய விருதை பெற்றார். இதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் தெரிவித்துள்ளதாவது... 'அசுரன்' படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைத்த தகவலைஅறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விருது எனக்கு கிடைத்த அனைவரது ஆசீர்வாதங்கள் தான் முக்கிய காரணம். முதலில் நான் நன்றி சொல்ல நினைப்பது எனது தாய், தந்தை, மற்றும் என்னுடைய குருவான சகோதரர் ஆகியோருக்கு தான்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள். அவர்தான் 'அசுரன்' படத்தில் சிவசாமி என்ற கதாபாத்திரத்தை எனக்கு தந்து இந்த விருது கிடைக்க காரணமானவர். இயக்குனர் வெற்றிமாறனை நான் முதல் முதலில் பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்தில் தான் பார்த்தேன். பின்னர் அவர் எனக்கு ஒரு அண்ணனாகவும் சிறந்த நண்பராகவும் தற்போது வரை இருந்து வருகிறார். அவர் இயக்கத்தில் மட்டும் இதுவரை 4 படங்களில் நடித்துள்ளேன். இரண்டு படங்களை தயாரிக்கும் வாய்ப்பும் கிடைத்தது  மிகப்பெரிய பெருமை.

தேசிய விருதுக்கு தேர்வு செய்த நடுவர்களுக்கும் எனது நன்றி என தெரிவித்துள்ளார். அதேபோல் தன்னுடைய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களுக்கும் நன்றி. 'அசுரன்' படத்தில் தன்னுடன் பணியாற்றிய பேச்சியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சுவாரியர், சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்த கென் மற்றும் முருகன் கதாபாத்திரத்தில் நடித்த தீஜே ஆகியோருக்கும் என்னுடைய நன்றிகள்.

இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், ஊடக தொலைக்காட்சிகள் மற்றும் சமூக பயனாளிகள் அனைவருக்கும் தனது நன்றிகள். அனைத்திற்கும் மேலாக தனக்கு மிகவும் ஒத்துழைப்புடன் இருந்து வரும் தனது ரசிகர்களுக்கு அளவில்லா அன்பை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த கடிதத்தில் தனுஷ் குறிப்பிட்டு உள்ளார்.

click me!