விமர்சனம் ‘2.0’ எத்தனை ஹாலிவுட் டைரக்டர்களை தூக்கி சாப்பிட்டிருக்கிறார் ஷங்கர்?

By vinoth kumarFirst Published Nov 29, 2018, 1:13 PM IST
Highlights

அக்‌ஷய் குமார் நல்ல விஷயத்துக்காக போராடும் நல்லவர் என்றாலும் மக்களிடமிருந்து செல்போன் பறிப்பதை ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமுடியாது என்ற காரணத்துக்காக வசீகரனும், சிட்டியும் அவரைக்கொன்று கதையை முடிக்கிறார்கள். முதலில் அக்‌ஷய் குமார் அதே கருத்தை, அதாவது ’செல்போனை அளவோடு பயன்படுத்துங்க. இந்த பூமியில மற்ற உயிரினங்களையும் வாழவிடுங்க’ என்று ரஜினி சொல்ல படம் சுபம்.

2015ல் துவங்கி 2018 நவம்பர் வரை நாலுவருட வெய்ட்டிங். ரஜினி,  இந்தி சூப்பர் ஆக்‌ஷன் குமார் அக்‌ஷய் குமார்,  550 கோடி பட்ஜெட், எமி ஜாக்‌ஷன், ஏ.ஆர். ரகுமான்,100கோடிக்கும் மேல் கிராஃபிக்ஸ் செலவுகள் மற்றும் உலகின் நம்பர் ஒன் தொழில் நுட்ப பங்களிப்புகள் என்று எல்லாம் சேரும்போது ஷங்கர் மாதிரி ஒரு இயக்குநர் என்னவெல்லாம் மேஜிக் நிகழ்த்தியிருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன்தான் ஒவ்வொரு ரசிகனும் தியேட்டருக்குள் நுழைவான். 

அந்த எதிர்பார்ப்பில் எத்தனை சதவிகிதம் இந்த ‘2.0’வில் பூர்த்தியானது என்பதற்கு போகுமுன் கதையைப் பார்ப்போம். 

உலகம் முழுக்க படம் ரிலீஸாவதால் எந்த நகரில் என்று குறிப்பிடவில்லை. ஒரு நகரில் திடீரென்று அனைவரது செல்போன்களும் மாயமாய் மறைந்து விடுகின்றன. செல்போன் மொத்த உரிமையாளர்கள், டீலர்கள், தொலை தொடர்பு இலாகா மந்திரி என்று வரிசையாகக் கொல்லப்படுகிறார்கள். செல்போன் டவர்கள் சரிந்து சாம்பலாகின்றன.

இதனால் டென்சனாகும் காவல்துறை வசீகரன் ரஜினியிடம் ஆலோசனை நடத்த, அவர் அதைக்கட்டுப்படுத்த தனது ரோபோ சிட்டியை மறுபடியும் ஆக்டிவேட் பண்ணினால்தான் முடியும் என்று சொல்ல, முதலில் மறுக்கும் அதிகாரிகள், அழிவுகள் மேலும் அதிகமாகவே சம்மதிக்கிறார்கள்.

சிட்டி மீண்டும் வருகிறார். செல்போன்களுக்கு எதிரான அட்ராசிட்டிகளை நடத்திவருவது பறவை மனிதன் அக்‌ஷய் குமார் என்பதும், நாட்டில் மனிதர்களைப்போலவே பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் வாழ உரிமையுண்டு என்று போராடி, அதில் தோற்று, ஒரு டவரில்  தொங்கி தற்கொலை செய்துகொண்’டவர் என்பதும் தெரியவருகிறது. 

அக்‌ஷய் குமார் நல்ல விஷயத்துக்காக போராடும் நல்லவர் என்றாலும் மக்களிடமிருந்து செல்போன் பறிப்பதை ஒருக்காலும் ஒத்துக்கொள்ளமுடியாது என்ற காரணத்துக்காக வசீகரனும், சிட்டியும் அவரைக்கொன்று கதையை முடிக்கிறார்கள். முதலில் அக்‌ஷய் குமார் அதே கருத்தை, அதாவது ’செல்போனை அளவோடு பயன்படுத்துங்க. இந்த பூமியில மற்ற உயிரினங்களையும் வாழவிடுங்க’ என்று ரஜினி சொல்ல படம் சுபம்.

செல்போன் பயன்பாட்டுக்கு எதிரான இந்தக் கருத்தை படமாகத் தயாரித்திருக்கும் நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸின் முக்கிய பிசினஸ் செல்போன் டீலிங்தான் என்பது படத்தின் முதல் நகைமுரண். 

ரஜினியை எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதில் ஷங்கர் தெளிவாக இருந்திருக்கிறார். படத்தில் ரஜினிக்கு சொல்லிக்கொள்ளும்படி சண்டைக்காட்சிகள் இல்லை. முக்கியமாக படத்தில் ஒரு பாடல்கூட இல்லை. நான்கு தினங்களுக்கு முன்பே தொலைக்காட்சிகளுக்கு தரப்பட்ட ‘இந்திர லோகத்து சுந்தரியே’ கூட படம் முடிந்த பிறகு எண்ட் கார்ட்களில்தான் வருகிறது.

அக்‌ஷயகுமார் ஃப்ளாஷ்பேக்கில் பறவைகளை நேசிக்கும் மனிதராக மனதுக்கு மிக நெருக்கமாக வருகிறார்.  மற்றபடி அவர் பலவித கெட் அப்புகளுக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் தினமும் நான்கு மணிநேரம் மெனக்கெட்டது ரொம்ப ரொம்ப கெட்டது. ஷங்கரின் முத்திரையும் கூட இந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே இருக்கிறது. எமி ஜாக்‌ஷனை  துவக்கத்திலேயே பொம்மை என்று சொல்லிவிட்டதால் ச்சும்மா வந்துபோகிறார்.

வில்லனை கதாநாயகனை விட நல்லவனாகக் காட்டியதாலோ என்னவோ ஒரு கட்டத்துக்கு மேல் படம் எங்கும் நகராமல் சலிப்புத் தட்ட ஆரம்பித்துவிடுகிறது.

நிரவ் ஷா வழக்கமான தனது துல்லியமான ஒளிப்பதிவில் மிளிர்கிறார். வசனம் போல பாடப்பட்ட ஒரு குட்டிப் பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளதால் படத்தில் எங்கும் ஏ.ஆர்.ரகுமான் ஞாபகம் வரவில்லை. 

இந்தப் படத்திற்கு ஏனோ துவக்கத்திலிருந்தே ராஜமவுலியின் ‘பாகுபலி’ படத்துடன் ஒரு ஒப்பீடு இருந்துகொண்டே இருந்தது. இன்னொரு பக்கம் இந்திய சினிமாவின் பெரும்பெரும் ஜாம்பவான்களெல்லாம் ஷங்கர் ஹாலிவுட்டின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டதாக அறைகூவல் விட்டுக்கொண்டே இருந்தார்கள். ஸ்பீல்பெர்க், கேமரூனையெல்லாம் விட்டுவிடலாம். ராஜமவுலியைத் தொடுவதற்கே ஷங்கருக்கு இன்னும் சில படங்கள் ஆகலாம் என்றே இந்த ‘2.0’பார்த்தபிறகு சொல்லத்தோன்றுகிறது.

மொத்தத்தில் அடல்ட்ஸ் படங்கள் மாதிரிஇந்த 2.0 குழந்தைகள் மட்டுமே பார்க்க்கூடிய சில்ட்ரன்ஸ் ஓன்லி படம்.

 

click me!