கோடிகள் புரளும் ஐபிஎல் வருமானத்துக்கு வரி விலக்கு! ஏன் தெரியுமா?

By SG BalanFirst Published May 31, 2023, 7:16 PM IST
Highlights

பிசிசிஐ ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மூலம் மட்டும் 48,390 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறது. ஆனால், எதற்கும் பிசிசிஐ வரி செலுத்துவதே கிடையாது.

ஒவ்வொரு ஆண்டும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு ஏலம் முதல் ஸ்பான்சர்ஷிப் வரை கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது. கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நம் நாட்டில் இது ஒரு மெகா நிகழ்வாக இருந்துவருகிறது. ஆனால், ஐபிஎல் நடத்தும் நிறுவன அமைப்பான பிசிசிஐ (BCCI) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மூலம் ஈட்டும் பல கோடி ரூபாய் வருவாய்க்கு வரி செலுத்துகிறதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதில், இல்லை. ஏனென்றால் ஐபிஎல் தொடருக்கு சட்டப்பூர்வமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது!

நவம்பர் 2, 2021 அன்று வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்வாதங்களை உறுதி செய்தது. ஐபிஎல் மூலம் பணம் சம்பாதித்தாலும், கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில்தான் அது நடக்கிறது என்றும் எனவே ஐபிஎல் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் கூறியது. எனவே, ஐபிஎல் லாபம் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் பிசிசிஐயின் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் வரை, சட்டப்படி வரி விலக்கு கோர முடியும்.

பாகிஸ்தான், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கள்ளநோட்டுகள்!

2016-17 ஆம் ஆண்டில் பிசிசிஐ ஈட்டும் ஐபிஎல் வருவாய் தொடர்பாக வருவாய்த் துறை மூன்று முறை பிசிசிஐக்கு ஷோ-காஸ் நோட்டீஸ்களை அனுப்பியது. இதனையடுத்து வருமானவரிச் சட்டத்தின் 12 ஏ பிரிவின் கீழ் ஐபிஎல் வருமானத்துக்கு பிசிசிஐ வரி விலக்கு பெறமுடியும் என வலியுறுத்தி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மும்பை அமர்வை பிசிசிஐ அணுகியது.

நடுவர்கள் ரவீஷ் சூட் மற்றும் பிரமோத் குமார் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாய அமர்வு, விளையாட்டுப் போட்டியை மிகவும் பிரபலம் ஆக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் தான், அதிக பணம் செலுத்தும் ஸ்பான்சர்ஷிப் கிடைக்கின்றன என்றும் அது கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் செயல்பாடுதான் என்றும் சொல்லி வருவாய்த் துறையின் வாதத்தை நிராகரித்தது.

எஸ்பிஐ பேங்க் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்! இந்த ஆவணங்கள் இருந்தா மட்டும் போதும்!

ஐபிஎல் தொடர் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இத்தொடரின் மதிப்பு தோராயமாக 15 பில்லியன் டாலர் ஆகும். 2023ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை விற்பனை செய்ததன் மூலம் மட்டும் பிசிசிஐ 48,390 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. இந்தத் தொகை கோவா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்களின் மொத்த பட்ஜெட் மதிப்பைவிட அதிகம். எல்ஐசி, பேடிஎம் போன்ற பிரபல நிறுவனங்களின் ஐபிஓ பங்கு மதிப்பைவிட அதிகம்.

ஆனால், பிசிசிஐ இதற்காக ஒரு பைசாகூட வரி செலுத்துவது கிடையாது. பிசிசிஐ கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் ஓர் அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் காரணத்தால் வருமானவரிச் சட்டத்தின் 12ஏ பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுகிறது.

2 மணிநேரம் கதறி அழுதேன்! வேலையை இழந்ததால் குமுறும் மெட்டா நிறுவன ஊழியர்

click me!