இந்திய பங்குச்சந்தைகளில் அதானி நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை சரிந்ததால் அதானி குழுமத்திற்கு ஒரே நாளில் சுமார் 50,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு இன்று பெரிய அளவில் சரிந்து ரூ.50,000 கோடிக்கு மேல் ஒட்டு மொத்த சந்தை மூலதனத்தை இழந்தன.
இந்த பங்குகளின் மதிப்புச் சரிவால், உள்நாட்டு பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடு சுமார் ஒரு சதவீதம் சரிந்தது. அதானி டோட்டல் கேஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் பங்குகள் 2 முதல் 6 சதவீதம் சரிந்து, ரூ.50,000 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தை இழந்தன.
அதானி குழுமத்திற்கு இருக்கும் கடன் குறித்து அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதுகுறித்து வெளியிட்டு இருந்த அறிக்கையில், இந்த குழுமத்திற்கு கணிசமான கடன் இருக்கிறது. இதுதான் இந்தக் குழும நிறுவனங்களை நிச்சயமற்ற நிலையில் வைத்து இருக்கிறது. இந்தக் குழுமத்தின் கீழ் வரும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை அதிக மதிப்பீடாக காட்டியதும் இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..பத்ம விருதுகள்: முலாயம் சிங் யாதவ், சுதா மூர்த்தி, கீரவாணி!.. யார் யாருக்கு விருது? முழு பட்டியல் !!
ஹிண்டர்பர்க் அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 120 பில்லியன் டாலர். இத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இவரது குழுமத்தின் கீழ் வரும் ஏழு மிக முக்கிய வர்த்தக நிறுவனங்களின் மதிப்பு, அந்த கால கட்டத்தில் சராசரியாக 819 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், அதானி குழுமம் வரிச் சுமை இல்லாத நாடுகளில் நிறுவனங்களை அமைத்துள்ளது. இந்தக் குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 2.5 பில்லியன் டாலர் அளவிற்கான பங்குகளை வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமம் ஹிண்டன்பர்க்கின் ஆய்வு அறிக்கையை மறுத்துள்ளது. ‘இந்த அறிக்கையானது இந்தியாவின் உயர் நீதிமன்றங்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, நிராகரிக்கப்பட்ட தவறான தகவல் மற்றும் பழமையான, ஆதாரமற்ற மற்றும் குற்றச்சாட்டுகளின் கலவை’ என்று அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?
இன்றைய பங்குகளின் சரிவை அடுத்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து, நான்காவது இடத்திற்கு கவுதம் அதானி தள்ளப்பட்டார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 121 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக்களுடன் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், 120 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அதானி நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் 155 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கடந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று இருந்தார். அதானி குழுமத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பும் ரூ.19.20 லட்சம் கோடியில் இருந்து, ரூ.18.23 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
இதையும் படிங்க..ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரப்போகிறது.. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO முக்கிய செய்தி