விற்பனையில் அடித்து தூக்கிய 'டோலோ 650'... ரெக்கார்ட் பிரேக் சாதனை.. எதுக்கு தெரியுமா..?

By Raghupati RFirst Published Jan 17, 2022, 7:18 AM IST
Highlights

டோலோ 650, கொரோனா கோர தாண்டவமாடிய மார்ச் 2020 முதல் ரூ. 567 கோடி விற்பனையாகி, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

உலகமெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பரவி வருகிறது. அதே நேரம், ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. #Dolo650 கடந்த வாரம் முழுவதும் சமூக ஊடகங்களில் டிரெண்டான வார்த்தையாகியுள்ளது. ஜனவரி 2020 முதல் பாராசிட்டமால் விற்பனைத் தரவைக் கவனித்தால், டோலோ 650 தவிர, கால்பால் சுமோ எல் உள்ளிட்ட 37 பிராண்டுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகம் விற்பனையாகியுள்ளன.

2021 டிசம்பரில் டோலோ 650 ரூ.28.9 கோடி விற்பனையாகியுள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 61.45 சதவீதம் அதிகமாகும். இருப்பினும் கோவிட் இரண்டாவது அலையின் உச்சத்தில் இருந்த காலத்தில் அதன் அதிகபட்ச விற்பனை இருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.48.9 கோடி மற்றும் ரூ.44.2 கோடி விற்பனையாகியுள்ளது. 2021 டிசம்பரில் அதிகம் விற்பனையான இரண்டாவது பாராசிட்டமால் பிராண்டான கால்பால் விற்பனை 28 கோடி ரூபாயாக இருந்தது. இது 2020 டிசம்பரில் இருந்து 56 சதவீதம் அதிகமாகும். 

இரண்டாவது அலையின் உச்சத்தில், கால்பால் ரூ.71.6 கோடியுடன் அதிக விற்பனையான பாராசிட்டமால் ஆகும். ஃபெபனில், பி-250, பாசிமால் மற்றும் குரோசின் ஆகியவை பாராசிட்டமாலின் பிற பிரபலமான பிராண்டுகள் ஆகும். டோலோ 650 அனைத்து வயதினருக்கும் கொடுக்கப்படலாம் என்பதாலும் குறைந்த பக்க விளைவுகள் மட்டுமே உள்ளதாவும் டாக்டர்கள் டோலோ 650 ஐ பரிந்துரைக்கின்றனர். அதுமட்டுமின்றி பாதுகாப்பான மருந்து மற்றும் அனைத்து வயதினரும் மற்றும் இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் எடுத்துக்கொள்ளும் வகையாக இருப்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல்வலி ஆகியவை மூன்றாவது அலையில் கோவிட் நோயின் முக்கிய அறிகுறிகள். அறிகுறிகள் லேசானவை பொதுவாக நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகிவிடும். அதுபோன்ற சூழலில் இந்த வகை பாராசிட்டமால் மருந்துகள் உதவுகின்றன. லேசான காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால் பாராசிட்டமால் சாப்பிடும் போக்கு உள்ளது.  டோலோ 650 ஆனது மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டது.  இது பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் 1973 இல் இது மருந்து விநியோகஸ்தர், ஜி.சி. சூரனா என்பவரால் நிறுவப்பட்டது, இந்நிறுவனத்தை தற்போது அவரது மகனும் நிர்வாக இயக்குநருமான திலீப் சுரானா நடத்தி வருகிறார்.

இதயவியல், நீரிழிவு நோய், கண் மருத்துவம் மற்றும் தோல் மருத்துவம் ஆகியவை அதன் நிபுணத்துவத்தின் முக்கிய பகுதிகளாகும். டோலோ 650 தவிர, உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஆம்லாங் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்தான டெனெப்ரைடு போன்ற பிராண்டுகளையும் நிறுவனம் விற்பனை செய்கிறது. நிறுவனத்தின் இணையதள தகவல்படி அதன் ஆண்டு வருவாய் ரூ.2,700 கோடியாகும், இதில் ரூ.920 கோடி ஏற்றுமதியும் அடங்கும்.பலருக்கு உடல் வலி ஏற்படுவதும் டோலோ விற்பனை அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். டோலோ விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. #Dolo650 என்ற ஹாஸ்டேக்கில் பலரும் இந்த டோலோ 650ன் நன்மைகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வருடத்தில் இதன் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றே கூறலாம்.

click me!