Kodiaq price : சீக்கிரம் மாறிவிடும் - ஷாக் அறிவிப்பு வெளியிட்ட ஸ்கோடா

By Nandhini SubramanianFirst Published Jan 19, 2022, 10:37 AM IST
Highlights

ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கோடியக் ஃபேஸ்லிப்ட் மாடலின் விலையை உயர்த்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்கோடா நிறுவனம் 2022 கோடியக் ஃபேஸ்லிப்ட் மாடலை ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகமான சில தினங்களிலேயே புதிய 7 சீட்டர் SUV மாடலின் விலையை ஸ்கோடா உயர்த்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கோடியக் ஃபேஸ்லிப்ட் மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. 

புதிய ஸ்கோடா கோடியக் ஃபேஸ்லிப்ட் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 34.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 37.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட கோடியக் ஃபேஸ்லிபிட் மாடல் விற்பனை துவங்கிய 24 மணி நேரத்தில் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தது.

எனினும், முதல் விற்பனையில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விவரங்களை ஸ்கோடா அறிவிக்கவே இல்லை. முதல் விற்பனையில் கோடியக் ஃபேஸ்லிப்ட் மாடலை முன்பதிவு செய்தவர்கள் காரை வாங்க நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டுவிட்டரில் பயனர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஸ்கோடா இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் கோடியக் ஃபேஸ்லிப்ட் அடுத்தக்கட்ட யூனிட்களின் விலை உயர்த்தப்பட இருப்பதை சூசகமாக தெரிவித்தார்.

புதிய கோடியக் ஃபேஸ்லிப்ட் மாடலின் விலை 2 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என ஸ்கோடா விற்பனையாளர்களும் தகவல் தெரிவித்து வருகின்றனர். எனினும், ஸ்கோடா சார்பில் இதுகுறித்து இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. இந்த மாடலை வாங்க திட்டமிட்டிருப்பின், அருகாமையில் உள்ள ஸ்கோடா விற்பனை மையங்களில் யூனிட் ஏதும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சமயங்களில் முன்பதிவு செய்தவர்கள் அதனை ஏதேனும் காரணங்களுக்காக ரத்து செய்து இருந்தால், காரை வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

அம்சங்களை பொருத்தவரை புதிய கோடியக் ஃபேஸ்லிப்ட் மாடலில் முன்புறம் ஹீடெட் மற்றும் கூல்டு இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், ஹேண்ட்ஸ்-ஃபிரீ பார்க்கிங், 360-டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், ஒன்பது ஏர்பேக், இ.எஸ்.பி., ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில்-டிசெண்ட் கண்ட்ரோல், எலெக்டிரானிக் டிஃபரென்ஷியல் லாக் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன.

2022 கோடியக் ஃபேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 190 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. 

click me!