
3 நாட்கள் சரிவுடன் தொடங்கிய மும்பை, தேசியப் பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவுகள் இன்று வெளியாவதால் முதலீட்டாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பணவீக்கம் அளவு கட்டுப்பாட்டு அளவைவிட மீறிவிட்டது. அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் உயர்ந்துவிட்டதாக நேற்று அறிக்கை வெளியாகின.
இந்தியாவில் மார்ச் மாதத்தில் பணவீக்கம் ரிசர்வ்வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்குள் இருப்பதைவிட அதிகரித்து 6.95% உயர்ந்தது. இதனால், ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதத்தை உயர்த்தலாம் எனத் தெரிகிறது.
பணவீக்கம் உயர்வு
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த கச்சா எண்ணெய் விலை இன்று வார்த்தகத்தில் சற்று உயர்ந்துள்ளது. இது தவிர உக்ரைனுடன் அமைதிப்பேச்சு என்பது முடிந்துவிட்டது என்று ரஷ்ய அதிபர் புதின் பேசியிருப்பது போர் இன்னும் தீவிரமடையும் என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற உலகக் காரணிகள் கவலைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய முதலீட்டாளர்கள் இன்று காலை வர்த்தகத்தை சாதகமான கண்ணோட்டத்தில் அனுகியுள்ளனர்
இன்போசிஸ் எதிர்பார்ப்பு
இன்போசிஸ் நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவுகள் இன்று வர்த்தக நேரத்தில் வெளியாகிறது. ஏற்கெனவே டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளதால், இன்போசிஸ் நிறுவனத்தின் லாபமும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் முதலீட்டாளர்கள் உள்ளனர்.
இதனால் வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பைப் பங்குச்சந்தையில் 290 புள்ளிகளும், நிப்டி 6 புள்ளிகளும் உயர்ந்தன. வர்த்தகம் தொடங்கியதும் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்ந்து, 58,843 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 83 புள்ளிகள் அதிகரித்து, 17,613 புள்ளிகளுடன் ஏற்றத்துடன் செல்கிறது.
நிப்டியில் ஓஎன்ஜிசி, ஹின்டால்கோ, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் லாபமீட்டி வருகின்றன. ஏசியன்பெயின்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், டைட்டன் நிறுவனம், நெஸ்ட்லே , ஹீரோ மோட்டார்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் இழப்பில் செல்கின்றன.
லாபமோ லாபம்
30 முக்கிய பங்குகள் உள்ள மும்பைப் பங்குச்சந்தையில் 5 பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன, மற்ற 25 பங்குகளும் லாபத்தில் செல்கின்றன. டாடா ஸ்டீல், ஏர்டெல், ஐடிசி பங்குகள் லாபத்தில் செல்கின்றன. ஏசியன் பெயின்ட்ஸ், டிஆர்எல், டைட்டன் பங்குகள் சரிவில் உள்ளன
நிப்டியில் அனைத்து துறைகளின் பங்குகளும் லாபமீட்டி வருகின்றன. குறிப்பாக உலோகம் , ரியல்எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள், ஆட்டோமொபைல், ஊடகம், தனியார்வங்கி, எப்எம்சிஜி ஆகிய துறைகளின் பங்குள் லாபத்துடன் நகர்கின்றன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.