
கடந்த 30 நாட்களாக தினசரி காய்கறிகள் விலை உயர்ந்து வருவது தங்களை மிகவும் பாதிக்கிறது என்று 10 குடும்பங்களில் 9 குடும்பத்தினர் கவலைத் தெரிவிக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
விலைவாசி சர்வே
லோக்கல் சர்க்கில் என்ற ஆய்வுநிறுவனம் நாட்டில் விலைவாசி உயர்வுகுறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியாவில் உள்ள 311 மாவட்டங்களில் 11,800 பேரிடம் கடந்த மார்ச் மாதம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில் 87 சதவீத குடும்பங்கள் விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
விலை அதிகரிப்பு
இதில் 37 சதவீதம் பேர் காய்கறி்களுக்கு வழக்கமாகச் செலவிடும் தொகையைவிட கூடுதலாக 25 சதவீதம் செலவிடுவதாக வேதனைத் தெரிவித்துள்ளனர். சில காய்கறிகள் விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
36 சதவீதம் பேர், விலை அதிகரிப்பால், 10 முதல் 25 சதவீதம் கூடுதலாக காய்கறிகளுக்கு செலவிடுகிறோம் என்றும், 14 சதவீதம் பேர் கடந்த பிப்ரவரி மாதம் வாங்கிய அதே காய்கறிகள் அளவுதான் மார்ச் மாதம் வாங்கினோம் ஆனால், 10 சதவீதம் கூடுதலாக விலை கொடுத்தோம் எனத் தெரிவித்துள்ளனர்
25 சதவீதம் பேர், பிப்ரவரி மாதம் வாங்கிய அதே காய்கறிகள் அளவுதான் மார்ச் மாதம் வாங்கினோம் ஆனால் 25 முதல் 50 சதவீதம் கூடுதலாக விலை கொடுத்தோம் எனத் தெரிவித்தனர். 5 சதவீதம் பேர் விலைவாசி ஏதும் உயரவில்லை வழக்கமாகத்தான் செலவிடுகிறோம் எனத் தெரிவித்தனர்
இரு மடங்கு
7 சதவீதம் பேர் வழக்கமாகக் காய்கறிகளுக்கு செலிவிடும் தொகையைவிட இரு மடங்கு செலவிடுகிறோம் என்று தெரிவித்தனர். 7 சதவீதம் பேர் கடந்த கால விலைக்கும், தற்போதுள்ள விலை உயர்வையும் பகுக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்கள், 36 சதவீதம் பேர் பெண்கள் . 48 சதவீதம் பேர் மெட்ரோ நகரங்களிலும், 29 சதவீதம் பேர் 2-ம்நிலை நகரங்களில் இருந்தும், 23 சதவீதம் பேர் 3 மற்றும் 4ம் நிலை நகரங்கள் கிராமப்புறங்களில் இருந்தும் பங்கேற்றனர்
சமையல் எண்ணெய்
லோக்கல் சர்க்கில் மார்ச் 23 முதல் ஏப்ரல் 7ம் தேதிவரை சமையல் எண்ணெய் விலை உயர்வு குறித்து ஆய்வு நடத்தியது. இதில் நாடுமுழுவதும் 359 மாவட்டங்களில் இருந்து 36ஆயிரம் பேர் பங்கேற்றனர்இதில் 24 சதவீதம் பேர் சமையல் எண்ணெய் விலை உயர்வால் அதன் பயன்பாட்டைக் குறைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேர் வழக்கமாகப் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் பிராண்டுக்குப் பதிலாக விலை குறைந்த சமையல்எண்ணெய்க்கு மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சமையல் எண்ணெய் விலை உயர்ந்துவிட்டதால் இதற்கு செலவிட வேண்டும் என்பதால் மற்ற விஷயங்களில் செலவிடுவதைத் குறைத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி
இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி போதுமான அளவு இல்லை என்பதால், சமையல் எண்ணெய் தேவையில் 55 முதல் 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக சூர்யகாந்தி எண்ணெய் உக்ரைன், ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகிறது. ஆனால், உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் சமையல் எண்ணெய் இறக்குமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகம்
ரஷ்யா உக்ரைனில் இருந்து ஆண்டுக்கு 2.5மில்லியன் டன் முதல் 2.70 மில்லிடன் டன் வரை சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
அதேபோல கடலை எண்ணெய் விலையும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருந்த விலையைவிட 9 சதவீதம் கூடுதலாகவே இந்த ஆண்டு விற்பனையாகிறது. கடுகு எண்ணெய் விலை கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் கூடுதலாகவே விற்பனையாகிறது. சோயா எண்ணெய் 22 சதவீதம் கூடுதலாகவும், பாமாயில் 21 சதவீதம் விலை அதிகமாகவும் விற்கப்படுகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.