
சர்வதேச காரணிகள், சூழல் சாதகமில்லாமல் இருப்பதால் தேசியப் பங்குச்சந்தையும், மும்பைப் பங்குச்சந்தையும் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
வாரத்தின் முதல்நாள்
கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பால் உற்சாகமடைந்த முதலீட்டாளர்கள் பிற்பகலுக்குப்பின் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கினர். இதனால், மும்பைப்பங்குச்சந்தை சென்செக்ஸ் 412 புள்ளிகளும், தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 144 புள்ளிகளும் உயர்ந்த நிலையில் முடிந்தன.
இதேபோக்கு வாரத்தின் முதல்நாளான இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க பெடரல் வங்கி, பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்களை இன்று வெளியிட இருக்கிறது. இதனை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர், பணவீக்கம் அதிகரித்தால், வட்டிவீதத்தை உயர்த்த வாய்ப்பிருப்பதால் அமெரி்க்க பெடரல் வங்கியின் அறிவிப்பை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
லாக்டவுன், கச்சா எண்ணெய்விலை சரிவு
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை. இதனால்பல்வேறு நகரங்களில் லாக்டவுன் நீடிக்கிறது. சீனாவில் லாக்டவுன் நீடிப்பதும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யவில்லை.
இது தவிர கச்சா எண்ணெய் விலை இன்று காலை வர்த்தகத்தில் சரிந்து வருவது, உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருவது ஆகியவையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ளன.
சரிவுடன் வர்த்தகம் தொடக்கம்
இதனால் இன்று காலை வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பே மும்பைப்பங்குச்சந்தையில் 100புள்ளிகள் சரிந்தது. வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 230 புள்ளிகள் சரிந்து, 59,209 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 52 புள்ளிகள் வீழ்ந்து, 17,731 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 19 பங்குகள் சரிவில் உள்ளன, 11 நிறுவனப் பங்குகள் லாபத்தில் செல்கின்றன. குறிப்பாக, என்டிபிசி, அல்ட்ராசிமெண்ட், சன்பார்மா, டிசிஎஸ், பவர்கிரிட், ஐடிசி,டாக்டர்ரெட்டீஸ், டெக்மகிந்திரா, மாருதி, இந்துஸ்தான்யுனிலீவர் ஆகிய பங்குகள் லாபத்தில் செல்கின்றன. அதேசமயம், இன்போசிஸ், கோடக்வங்கி,ஹெச்டிஎப்சி உள்ளிட்ட பங்குகள் சிரிவில் உள்ளன.
இன்று பிற்பகலில் இன்போசிஸ் நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவுகள் வெளியாவதால் முன்னெச்சரிக்கையாக இன்போசிஸ் பங்குகளை விற்று முதலீட்டாளர்கள் லாபம் பார்த்து வருகிறார்கள். ஒருவேளை 4-வது காலாண்டில் இன்போசிஸ் சிறப்பாகச் செயல்பட்டால், பிற்பகலுக்குப்பின் பங்குச்சந்தை வேகமெடுக்கும்.
நிப்டியில் ஆட்டமொபைல்,ஊடகம், உலோகம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி,ரியல்எஸ்டேட் துறை பங்குகள் லாபமீட்டி வருகின்றன. தகவல்தொழில்நுட்பம், எப்எம்சிஜி, தனியார்வங்கி, நிதிச்சேவை ஆகிய துறைகளின் பங்குகள் சரிவில் உள்ளன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.