bse: nse: sensex: stock market:ரூபாய் மதிப்பு வரலாற்று வீழ்ச்சி! காரணம் என்ன? சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு

By Pothy RajFirst Published Sep 26, 2022, 11:07 AM IST
Highlights

அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று காலை வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு 46 காசு சரிந்து ரூ.81.55 ஆக வீழ்ச்சி அடைந்தது. 

அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று காலை வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு 46 காசு சரிந்து ரூ.81.55 ஆக வீழ்ச்சி அடைந்தது. 

வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகம் முடியும் போது ரூபாய் மதிப்பு ரூ.80.99 ஆக இருந்த நிலையில், இன்று காலை ரூ.81.55 ஆகச் சரிந்துள்ளது. தொடர்ந்து 8வது வர்த்தக தினங்களாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது, இதுவரை டாலருக்கு  எதிராக 2.8 சதவீதம் ரூபாய் மதிப்புவீழ்ச்சி அடைந்துள்ளது. 

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு சரிந்து வருவதால், ரிசர்வ் வங்கி தலையீட்டு டாலரை வெளியிட்டு வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் பிரச்சினைகளில் ஏற்பட்ட திடீர் பதற்றம், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீத உயர்வு, அந்நிய முதலீடு வெளியேற்றம், உள்நாட்டு பங்குகளின் எதிர்மறையான போக்கு ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின. இதனால், அந்நியச் செலாவணிச் சந்தையிலும் பங்குச்சந்தையிலும் இன்று காலை முதல் சரிவு காணப்படுகிறது

அமெரிக்க பெடரல் வங்கி அடுத்துவரும் மாதங்களிலும் வட்டி வீதத்தை உயர்த்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். இதனால் இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக மேலும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல், நாட்டில் ஆகஸ்ட் மாத சில்லரைப் பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் இதைக் குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையிலும் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிவு காணப்படுகிறது. 

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 916 புள்ளிகள் சரிந்து, 57,182  புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 304 புள்ளிகள் குறைந்து, 17,022 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை வெளியே எடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில்ரூ.2,899 கோடி முதலீடு வெளியேறியது. இதனால் ரிசர்வ் வங்கியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 521 கோடி டாலர் குறைந்து, 5456.52 கோடியாக சரிந்தது. 

மும்பைப் பங்குசந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில், பவர் கிரிட், டாடா ஸ்டீல், மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, என்டிபிசி, இன்டஸ்இன்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டைட்டன் ஆகிய பங்குகள் மதிப்பு சரிந்தன. நெஸ்ட்லே, இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் மட்டுமே  ஓரளவுதாக்குப்பிடிக்கின்றன

ஆசியாவில் சியோல், டோக்கியோ, ஷாங்காய், பங்குச்சந்தைகளும் இன்று சரிந்தன, ஹாங்காங் பங்குச்சந்தை மட்டும் ஓரளவு உயர்ந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில்அமெரிக்க பங்குச்சந்தையும் சரிவில் முடிந்தது. இவை அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று, முதலீட்டை எடுக்கத் தொடங்கியதால், பங்குச்சந்தையில் சரிவு காணப்படுகிறது

click me!