கடன்களை வசூலிக்கும் போது, அதற்கான கட்டணங்கள் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கடன்களின் இ.எம்.ஐகளுக்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடன் வாங்கிய அனைவருக்கும் தெளிவாகத் தெரிவிக்கவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் கடன் வாங்கியவர் விதிக்கும் அபராதம் 'பெனால்டி சார்ஜ்' ஆக வசூலிக்கப்படுகிறது. இது கடனுக்கான வட்டி விகிதத்துடன் அபராத வட்டியாக வசூலிக்கப்படாது. வங்கிகள் வட்டி விகிதத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் எதையும் அறிமுகப்படுத்தக்கூடாது.
தனிநபர் கடன்களுக்கு விதிக்கப்படும் அபராதக் கட்டணம் வணிக நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படுவதை விட அதிகமாக இருக்கக்கூடாது. அபராதக் கட்டணங்களில் கூடுதல் வட்டி கணக்கிடப்படாது. அதேபோல, கடன் கணக்கின் மீதான கூட்டு வட்டியின் வழக்கமான நடைமுறையை இது பாதிக்காது. எந்தவொரு கடன் திட்டமும் அபராதம் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நியாயமானதாகவும் பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும். மாறுபட்ட வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி முறைக்கு மாறு போது கட்டணத்தை வெளிப்படையாக வாடிக்கையாளர்களிடம் கூற வேண்டும்.
கடன் ஒப்பந்தம் மற்றும் அபராதத்திற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். வங்கிகள் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன்களுக்கான கொள்கைகளை உருவாக்கலாம்.
கடன் நினைவூட்டல்களை அனுப்பும் போது, அபராதக் கட்டணத் தொகையின் விவரங்களையும் அனுப்ப வேண்டும். அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கடனை ஓரளவு அல்லது முழுமையாகச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது
எனவே, 6 மாதங்களுக்குள் அனைத்து வங்கிகளும் அபராதம் இல்லாத புதிய கட்டண முறைக்கு மாற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், கிரெடிட் கார்டு, வர்த்தகக் கடன் போன்றவற்றுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மறைமுக கட்டணங்களை வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.