ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர் யார் என்றால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 94.6 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர் யார் என்றால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? அதன் தலைவர் முகேஷ் அம்பானி என்று நீங்கள் சொன்னால் அது தவறு.. ஆம். முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் இருந்து ஒரு ரூபாயை கூட சம்பளமாக எடுத்துக்கொள்ளவில்லை. 2022-23 நிதியாண்டில், அம்பானி எந்த தொகையையும் சம்பளமாக பெறவில்லை. 2021 நிதியாண்டிலிருந்து அம்பானி சம்பளம் வாங்கவில்லை.
2008-09 ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானி தனது ஆண்டு ஊதியத்தை 15 கோடியாக பெற்றார். அவர் 2020 நிதியாண்டு வரை அதே சம்பளத்தை பெற்றார். இருப்பினும், 2021 நிதியாண்டிலிருந்து, அவர் தனது சம்பளத்தை கைவிட முன்வந்தார். கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பின்னடைவை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனமும் அதன் அனைத்து வணிகங்களும் தங்கள் வருவாய்த் திறனுக்கு முழுமையாகத் திரும்பும் வரை, தனது சம்பளத்தைத் துறக்க விரும்பினார். ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானி தனது பங்கிற்கு அலவன்ஸ்கள், முன்நிபந்தனைகள், ஓய்வூதிய பலன்கள், கமிஷன் அல்லது பங்கு விருப்பங்களைப் பெறவில்லை.
ஆனால் உண்மையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களாக இருப்பது அம்பானியின் உறவினர்கள் தான். நிகில் மற்றும் ஹிடல் மேஸ்வானி ஆகியோர் தலா ரூ. 25 கோடி சம்பாதித்துள்ளனர், இதில் ரூ.17.28 கோடி கமிஷன் அடங்கும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இருவரும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநர்களில் ஒருவரான ரசிக்லால் மேஸ்வானியின் மகன்கள் ஆவர். திருபாய் அம்பானியின் மூத்த சகோதரி திரிலோச்னா பென்னின் மகன் ரசிக்லால் ஆவார்.
ரிலையன்ஸ் முக்கிய பொறுப்பில் இருந்து நீடா அம்பானி விலகல்; ஈஷா, ஆகாஷ், ஆனந்துக்கு முக்கிய பொறுப்பு!!
நிகில் மேஸ்வானி ஒரு கெமிக்கல் இன்ஜினியர். அவர் 1986 இல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார், ஜூலை 1, 1988 முதல், அவர் முழு நேர இயக்குநராக, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் முதன்மையாக பெட்ரோ கெமிக்கல்ஸ் பிரிவுக்கு பொறுப்பு வகிக்கிறார். பெட்ரோ கெமிக்கல்ஸ் ரிலையன்ஸ் உலக அளவில் முன்னணியில் இருப்பதில் பெரும் பங்களிப்பை நிகிழ் வழங்கி உள்ளார். 1997 மற்றும் 2005 க்கு இடையில், அவர் நிறுவனத்திற்கான சுத்திகரிப்பு வணிகத்தை கையாண்டார். கூடுதலாக, கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் குழு வரிவிதிப்பு போன்ற பல நிறுவன பொறுப்புகளை அவர் தொடர்ந்து வகித்து வருகிறார். ரிலையன்ஸுக்குச் சொந்தமான ஐபிஎல் கிரிக்கெட் உரிமையான மும்பை இந்தியன்ஸ், இந்தியன் சூப்பர் லீக் மற்றும் நிறுவனத்தின் பிற விளையாட்டு முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
மறுபுறம், ஹிடல் மெஸ்வானி அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் (UPenn) மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பட்டதாரி ஆவார். வார்டன் வணிகப் பள்ளியில் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டமும் பெற்றார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் 1990ல் சேர்ந்தார்.
ஆகஸ்ட் 4, 1995 முதல், ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட முழு நேர இயக்குநராக அவர் நிறுவனத்தின் குழுவில் உள்ளார். பெட்ரோலியம் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் வணிகம், பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி மற்றும் நிறுவனத்தின் பல நிறுவன செயல்பாடுகளில் அவரது ஒட்டுமொத்தப் பொறுப்பு உள்ளது. மனித வள மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மூலதனத் திட்ட செயலாக்கம் உட்பட பல துறைகளுக்கு பொறுப்பு வகிக்கிறார்.
இதற்கிடையில், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அல்லாதவர், அமர்வுக் கட்டணமாக ரூ. 6 லட்சமும், 2022-23-க்கான கமிஷனாக ரூ. 2 கோடியும் சம்பாதித்தார். 2020-21 ஆம் ஆண்டில் அவர் ரூ 8 லட்சம் அமர்வுக் கட்டணத்தையும் மேலும் ரூ 1.65 கோடி கமிஷனையும் பெற்றுள்ளார். ரிலையன்ஸ் நிறுவன செயல் இயக்குனர் பிஎம்எஸ் பிரசாத் 2022-23ல் செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் உட்பட ரூ.13.50 கோடி ஈட்டினார். பவன் குமார் கபில் ரூ.4.40 கோடி சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.