பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி... பெட்ரோல் - டீசலைத் தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்த மானிய சிலிண்டர் விலை..!

By vinoth kumarFirst Published Oct 2, 2019, 10:44 AM IST
Highlights

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை 13.50 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 620, சேலத்தில் 638.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை 13.50 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 620, சேலத்தில் 638.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதனிடையே, சவுதி அரேபியாவில் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா அரசின் கச்சா எண்ணெய் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் பெட்ரோலிய பொருட்கள் முன்புபோல கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவ தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துகொண்டு இருக்கிறது. இப்போது அந்த வரிசையில் கியாஸ் விலையும் இடம்பிடித்து உள்ளது.

நாடு முழுவதும் நடப்பு மாதத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டது. இதில் முந்தைய மாதத்தை காட்டிலும் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை 13.50 உயர்ந்துள்ளது. இதுவே 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 24.50 அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், சேலத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) மானியமில்லா சிலிண்டர் 625-க்கு விற்கப்பட்ட நிலையில், நடப்பு மாதம் (அக்டோபர்) 13.50 உயர்ந்து 638.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவே சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை 606.50ல் இருந்து 620 ஆக அதிகரித்துள்ளது. மற்ற நகரங்களுக்கிடையேயும் விற்பனை விலையில் மாற்றம் இருக்கும். மானிய சிலிண்டரை பொறுத்தவரை நடப்பு மாதம், மானியமாக 102 கிடைக்கும். அந்த தொகை வங்கியில் வரவாகும். சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 1,174.50ல் இருந்து 1,199 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு மாதம் முழுவதும் இவ்விலையில் தான், சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

click me!