நாலு வருஷம் காத்திருங்க - டொயோட்டா லேண்ட் குரூயிசர் பாவங்கள்

By Nandhini SubramanianFirst Published Jan 22, 2022, 12:22 PM IST
Highlights

டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் குரூயிசர் மாடல் வினியோக பணிகளில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

லேண்ட் குரூயிசர் மாடல்களின் இந்திய வெளியீடு மேலும் தாமதமாகி இருக்கிறது. உலக நாடுகளில் லேண்ட் குரூயிசர் LC300 மாடலை முன்பதிவு செய்து இருப்பவர்களிடம், தங்களின் எஸ்.யு.வி. நான்கு ஆண்டுகளுக்கு பின் தான் டெலிவரி செய்யப்படும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது. 

ஜப்பான் மற்றும் சீனாவில் ஏற்பட்டுள்ள வினியோக பாதிப்பு மற்றும் சிப்செட் குறைபாடு போன்ற காரணங்களால் லேண்ட் குரூயிசர் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது டொயோட்டா நிறுவனத்தின் சில ஆலைகள் இதே காரணத்திற்காக மூடப்பட்டுள்ளன. லேண்ட் குரூயிசர் மட்டுமின்றி கொரோலா, கேம்ரி மற்றும் ஜி.ஆர். யாரிஸ் போன்ற மாடல்களின் உற்பத்தி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாடல்களை விட லேண்ட் குரூயிசர் LC300 மற்றும் லெக்சஸ் LX ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடல்களின் உற்பத்தி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட மேலும் தாமதமாகி இருக்கிறது. லேண்ட் குரூயிசர் LC300 மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஃபுல்-சைஸ் ஆடம்பர எஸ்.யு.வி. மாடல் ஆகும். இது GA-F பாடி-ஆன்-ஃபிரேம் பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது.

இந்த மாடலில் 3.3 லிட்டர் வி6 டுவின் டர்போ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 309 பி.எஸ். பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 3.5 லிட்டர் வி6 டுவின் டர்போ பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 415 பி.எஸ். பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் ஒமிக்ரான் வேரியண்ட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலேயே லேண்ட்  குரூயிசர் வினியோகம் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வரும் மாதங்களில் உலகின் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு இயல்பு நிலைக்கு திரும்பும் பட்சத்தில் காத்திருப்பு காலம் எப்போது வேண்டுமானாலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் டொயோட்டா நிறுவத்தின் ஃபிளக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்தியாவில் புதிய லேண்ட் குரூயிசர் மாடலின் விலை ரூ. 1.5 கோடிக்கும், (எக்ஸ்-ஷோரூம்) அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

click me!