எகிறும் கொரோனா பாதிப்பு - உற்பத்திக்கு பிரேக் போட்ட டொயோட்டா

By Nandhini SubramanianFirst Published Jan 22, 2022, 11:02 AM IST
Highlights

டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம்  கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஜப்பானில் வினியோக பணிகளில் இடையூறு மற்றும் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு வருவதால் சீனாவில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டொயோட்டா நிறுவனம், தனது உற்பத்தி பணிகளை ஒரு வாரத்திற்கு நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது.

டொயோட்டாவின் சுட்சுமி ஆலையின் இரண்டாவது உற்பத்தி பிரிவில் பணிகள் நிறுத்தப்பட்டடுள்ளன. இதேபோன்று ஜப்பான் ஆலையில் ஒரு ஷிஃப்ட் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக 1500 வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆலையில் டொயோட்டா நிறுவனத்தின் பிரபல கேம்ரி செடான் மாடல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இரு ஆலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் ஜனவரி 2022 மாதத்திற்கான டொயோட்டா வாகனங்கள் உற்பத்தி யூனிட்கள் அடிப்படையில் 47 ஆயிரம் வாகனங்களாக குறையும் என டொயேட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

தற்போதைய இடையூறு காரணமாக 11 உற்பத்தி ஆலைகளில் செயல்பட்டு வரும் 21 அசெம்ப்லி லைன்களில் இந்த மாதத்தின் மூன்று நாட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதவிர சீனாவில் இயங்கி வரும் டின்ஜின் ஆலையிலும்  உற்பத்தி பணிகளை டொயோட்டா தற்காலிகமாக நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிதியாண்டு 90 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்த டொயோட்டா, இதை எட்டுவதில் சிக்கல் ஏற்படலாம் என கடந்த வாரம் அறிவித்தது. சர்வதேசே ஆட்டோமொபைல் சந்தையில் சிப்செட் குறைபாடு ஆட்டோ உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் தனது சுசுகா ஆலையில் பிப்ரவரி மாத துவக்கம் முதலே 90 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாக அறிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"உற்பத்தி பணிகள் மெல்ல மீண்டு வந்தாலும், சிப்செட் குறைபாடு காரணமாக நிலைமை கேள்விக்குறியாகவே இருக்கிறது. சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம். எனினும், கொரோனா வைரஸ் தாக்கம் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதனால் எத்தகைய சூழ்நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும்," என நிசான் மோட்டார் கோ நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி மகோடோ யுசிட்டா தெரிவித்துள்ளார்.

click me!