
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்குவதற்கான ஆயத்த பணிகளை எல்.எம்.எல். மேற்கொண்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் மற்ற நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய எல்.எம்.எல். திட்டமிட்டுள்ளது. இதற்கென எல்.எம்.எல். நிறுவனம் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான சயிரா எலெக்ட்ரிக் ஆட்டோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
முன்னதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு சயிரா எலெக்ட்ரிக் நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. ஹரியானா மாநிலத்தின் பவல் பகுதியில் சயிரா நிறுவனத்திற்கான வாகனங்கள் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இதே ஆலையில் தான் தற்போது எல்.எம்.எல். பிராண்டு எலெக்ட்ரிக் வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
"இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ பிரிவில் அதிக நம்பிக்கையை பெற்ற பெயர்களில் ஒன்றாக இருக்கும் நிறுவனத்துடன் மிக முக்கிய கூட்டணி அமைத்து இருப்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உலகின் முன்னணி ஆட்டோ பிராண்டுகளின் நம்பிக்கையை பெற்று இருப்பதோடு, அசாத்திய அனுபவம் கொண்டிருப்பதால், சயிரா மட்டுமே எங்களின் முதல் தேர்வாக இருந்தது. மிக உறுதியான கனவுகளுடன் துவங்கி இருப்பதால், இந்த கூட்டணி கொண்டு 100 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மூலம் உலகத்தரம் மிக்க பிராண்டை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்," என எல்.எம்.எல். நிறுவன தலைமமை செயல் அதிகாரி டாக்டர். யோகேஷ் பாட்டியா தெரிவித்தார்.
"ஆட்டோ உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைத்துக் கொண்டு இந்தியா மட்டுமின்றி உலக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எங்களின் குறிக்கோளுக்கு இந்த கூட்டணி அடித்தளமாக இருக்கும். இதன் மூலம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எதிர்காலத்தை மறு கற்பனை செய்து உலகத்தரம் மிக்க வகையில் மாற்ற முடியும்," என அவர் மேலும் தெரிவித்தார்.
சயிராவின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைகளை பயன்படுத்தி எதிர்காலத்திற்கு தேவையான வகையில் தலைசிறந்த உற்பத்தி ஆலையை கட்டமைக்க எல்.எம்.எல். திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் 100 சதவீதம் "மேக் இன் இந்தியா" நிறுவனமாக மாற வேண்டும் என்ற இலக்கை அடையும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள முதற்படி இது. சயிரா உற்பத்தி ஆலை 2,17,800 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் ஒவ்வொரு மாதமும் 18 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். இதன் உள்கட்டமைப்புகள் உலகத்தரம் மிக்கதாக இருக்கும் என கூறப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.