Hero XPulse 200 4V : புதிய 200சிசி மாடலுக்கான முன்பதிவை துவங்கிய ஹீரோ மோட்டோகார்ப்

By Nandhini SubramanianFirst Published Jan 21, 2022, 10:48 AM IST
Highlights

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்-பல்ஸ் 200 4V மோட்டார்சைக்கிள் மாடலுக்கான இரண்டாம் கட்ட முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்-பல்ஸ் 200 4V மாடல் இரண்டாம் கட்ட யூனிட்களுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்ததை அடுத்து இரண்டாம் கட்ட யூனிட்களின் முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. 

இந்திய சந்தையில் புதிய ஹீரோ எக்ஸ்-பல்ஸ் 200 4V மாடலின் விலை ரூ. 1,30,150 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவுகள் ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும். 

புதிய ஹீரோ எக்ஸ்-பல்ஸ் 200 4V மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 200சிசி 4 வால்வு ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 19.1 ஹெச்.பி. திறன், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

4 வால்வு ஆயில் கூல்டு என்ஜின் தலைசிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதோடு, அதிவேகமாக செல்லும் போதும் என்ஜின் இரைச்சலின்றி சீராக இயங்குகிறது என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. எக்ஸ்-பல்ஸ் 200 பவர்டிரெயினில் உள்ள 4V தொழில்நுட்பம் இதனை சாத்தியப்படுத்துகிறது.

இந்த மோட்டார்சைக்கிளின் கூலிங் சிஸ்டம் தொழில்நுட்பத்தையும் ஹீரோ மோட்டோகார்ப் மேம்படுத்தி இருக்கிறது. இதற்கென 7 ஃபின் ஆயில் கூலர் பயன்படுத்தப்படுகிறது. 

"போட்டியில்லா அனுபவத்தை வழங்குவதற்காகவே பெயர்பெற்ற மாடலாக ஹீரோ எக்ஸ்-பல்ஸ் 200 அறியப்படுகிறது. தலைசிறந்த தொழில்நுட்பம், அதிநவீன வடிவமைப்பு மற்றும் தனித்துவம் மிக்க தோற்றம் இந்த மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கிறது," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன விற்பனை மற்றும் ஆஃப்டர்சேல்ஸ் பிரிவு தலைவர் நவீன் சவுகான் தெரிவித்தார். 

"புதிய எக்ஸ்-பல்ஸ் 200 4V மாடலுக்கு எங்களின் வாடிக்கையாளர்கள் கொடுத்திருக்கும் வரவேற்புக்கும், பெருவாரியான விற்பனைக்கும் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். முகற்கட்ட யூனிட்கள் உடனடியாக விற்றுத்தீர்ந்து இருப்பது பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. அடுத்தக்கட்ட யூனிட்களின் முன்பதிவு துவங்கி இருப்பதன் மூலம் எக்ஸ்-பல்ஸ் 200 4V மாடலுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடை எதிர்கொள்ள முடியும் என நம்புகிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார். 

click me!