
இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை தற்போதைக்கு நீக்குவதற்கு வாய்ப்பில்லை என்பதில் இந்தியா திட்டவட்டமாக இருக்கிறது. ஆனால், கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதால் உலக நாடுகள் இந்தியாவிடம் தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன
கோதுமை உற்பத்தி
உலகிலேயே அதிகமாக கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ரஷ்யா, உக்ரைன். ஆனால், இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும்போரால் கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதையடுத்து, உலகிலேயே 3-வது மிகப்பெரிய கோதுமை உற்பத்தி, ஏற்றுமதியாளரான இந்தியாவின் பக்கம் உலக நாடுகள் கவனம் திரும்பியது.
ரஷ்யா உக்ரைன் போருக்குப்பின் இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியது. அதேசமயம், நாட்டில் நிலவும் கடுமையான வெயில், வெப்ப அலை காரணமாக இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் பாதிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல்கட்ட கணிப்பில் 111 மில்லியன் டன் கோதுமை விளைச்சல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதை 106மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது.
தடை
அதுமட்டுமல்லாமல் கோதுமை விலையும், கோதுமையால் செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. கோதுமைக்கான தேவையும் படிப்படியாக அதிகரித்தது. இதை உணர்ந்த மத்திய அரசு உள்நாட்டு தேவையை சரிசெய்யவும், விலையைக் கட்டுப்படுத்தவும் அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கோதுமை ஏற்றுமதிக்கு திடீரென தடை விதித்தது.
கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. டோவோஸ் நகரில் நடந்து வரும் உலகப் பொருளதார மாநாட்டிலும் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். அதிலும் இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உலக நாடுகளில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
கோரிக்கை
இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ஓமன், ஏமன் நாடுகள் வெளிப்படையாகவே இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை கவலையை ஏற்படுத்துகிறது அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று இந்தியாவிடம் ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ஓமன், ஏமன் நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன
இதற்கிடையே உலகப் பொருளதாரா மாநாட்டில் பங்கேற்றுள்ள, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கோதுமை ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தடை நீக்கம் இல்லை
அதற்கு அவர் “ உலகில் தற்போது நிலையற்றதன்மை நிலவுகிறது. நாங்கள் இப்போது கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கினால், அது பதுக்கல்காரர்களுக்கும், கறுப்புச்சந்தைக்கும், ஊக வாணிபத்தில் ஈடுபடுவோருக்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். உண்மையில் யாருக்கு பயன்பட வேண்டுமோ, எந்தெந்த நாடுகளுக்கு தேவையாக இருக்கிறதோ அந்த நாடுகளுக்கும், உரிய பயனாளிகளகுக்கும் சென்று சேராது. ஆதலால் இப்போதைக்கு கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கமாட்டோம். ஆனால் இந்திய அரசுடன் வேறு எந்த நாட்டு அரசும் பேசி ஒப்பந்தம் செய்தால்,மக்களுக்கு உதவும் நோக்கில், ஏழைகளுக்கு உதவும் நோக்கில் ஒருநாட்டு அரசுக்கு நேரடியாக இந்தியா வழங்கும்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.