விலைவாசி உயர்வு vs பொருளாதார வளர்ச்சி: பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வரிக்குறைப்பு மோடி அரசுக்கு உதவுமா?

By Pothy RajFirst Published May 25, 2022, 6:04 PM IST
Highlights

india inflation: inflation rate: narendra modi: நாட்டில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒருபுறம் போராட்டம் மறுபுறம் , நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்தும் அளி்க்க வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இருக்கிறது.

நாட்டில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒருபுறம் போராட்டம் மறுபுறம் , நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்தும் அளி்க்க வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இருக்கிறது.

பணவீக்கம் அதிகரிப்பு

கடந்த ஜனவரி முதல் நாட்டின் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட அதிகரி்த்து வருகிறது. ரிசர்வ் வங்கி 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைத்திருந்தது. ஆனால், அதைவிடக் கடந்து மார்ச் மாதத்தில் 6.95%, ஏப்ரல் மாதத்தில் 7.79 % என அதிகரித்தது. இதனால் ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை நடவடிக்கையை கையில் எடுத்து வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி இருக்கிறது.

ஆனால், ரிசர்வ் வங்கி மட்டும் நடவடிக்கை எடுத்தால் பணவீக்கம் குறையாது. பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வுதான் பணவீக்கம் உயர்வுக்கு பெரும்பகுதியான காரணம். ஆதலால், மத்திய அரசும் நடவடிக்கையில் இறங்கியது. கடந்த சனிக்கிழமை பெட்ரோலில் லிட்டருக்கு 8ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 6 ரூபாயும் உற்பத்தி வரியில் மத்திய அரசு குறைத்தது.

அதுமட்டுமல்லாமல் உருக்குப் பொருட்களில் 8 வகையான பொருட்களுக்கு 15 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தது. பிளாஸ்டிக் மற்றும் உருக்குக்கான கச்சாப் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு நடவடிக்கை

கோதுமை ஏற்றுமதியால் உள்நாட்டில் விலை அதிகரித்து வருவதை உணர்ந்த மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்திருக்கிறது. இதில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுவிதித்துள்ளது. இவை அனைத்தும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு அவசரஅவசரமாக எடுத்துள்ள நடவடிக்கையாகும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பணவீக்கம் ஓரளவுக்கு நீண்டகாலத்தில் குறைந்து சில்லரை விலையை குறைத்தாலும், பொருளாதார ரீதியாக மத்திய அ ரசுக்கு வர்த்தகப் பற்றாக்குறையை பெரிதாக்கும், பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வட்டிஉயர்வு

இது தவிர வரும் ஜூன் மாதத்தில் 6முதல் 8ம் தேதி வரை நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும்பொருட்டு,  ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கடந்தஇரு நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் சிஎன்பிசி சேனலுக்குஅளித்த பேட்டியி்ல “வட்டிவீதம் உயரும் ஆனால் எவ்வளவு உயரும் எனத் தெரிவிக்க இயலாது. 5.15 சதவீதம் வரை உயருமா எனக் கூற இயலாது” எனத் தெரிவித்தார். ஆதலால் தற்போது 4.40 சதவீதமாக இருக்கும் வட்டி மேலும் அதிகரிக்கக்கூடும்.

இதற்கிடையே ஏப்ரலில் ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க அளவை 5.7 சதவீதமாக உயர்த்தியது. முன்பு, 4.5 சதவீதமாக வைத்திருந்தநிலையில் அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் பொருளாதார வளரச்சியை நடப்பு நிதியாண்டில் 7.8சதவீதம் என மதிப்பிட்ட நிலையில் அதை 7.2 சதவீதமாகக் குறைத்து கணித்தது. உக்ரைன் ரஷ்யாபோர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் உயர்வு, புவிசார் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு குறைக்கப்பட்டது.

கட்டுப்படு்த்தும்

ஆனால், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுக்கும் நடவடிக்கைகள் பலன் அளி்க்குமா என்பது கேள்வியாகும். இதுகுறித்து நோமுரா நிறுவனத்தின் பொருளாதார ஆய்வாளர் சோனல் வர்மா கூறுகையில்  “ பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த நிதி மற்றும் பணக்கொள்கை நடவடிக்கைகள் பலன்அளிக்கும். மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தாலும் சில்லரைப் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட100 புள்ளிகள் கூடுதலாகவே செல்லும். உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும். அதேநேரம் ரிசர்வ் வங்கி, அரசு எடுத்த நடவடிக்கைள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். நிதிப்பற்றாக்குறையை அளவை 40 முதல் 50 புள்ளிகள் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்

கோடக் பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் பொருளாதார ஆய்வாளர் சுவதீப் ராக்சித் கூறுகையில் “ வட்டிவீத உயர்வு, ஏற்றுமதி வரி உயர்வு போன்றவற்றால் கடன் வாங்கும் செலவு அதிகரிக்கும். இதனால், முதலீட்டுக்கானசெலவு குறைந்து, பொருளாதர வளர்ச்சியைப்பாதிக்கும். பொருளாதார வளர்ச்சியில் சமீபத்தில் ஏற்பட்ட தொய்வு என்பது நுகர்வோர் தேவையில் ஏற்பட்ட உறுதியற்றதன்மை தனியார் முதலீடு வருவதற்கு தடையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்


 

click me!