அரசு மானியத்துடன் புது வீடு கட்டலாம்! அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Published : Mar 15, 2025, 02:20 PM ISTUpdated : Mar 15, 2025, 03:37 PM IST
அரசு மானியத்துடன் புது வீடு கட்டலாம்! அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

சுருக்கம்

ஏழை எளியோருக்காக மத்திய, மாநில அரசுகள் வீட்டு வசதித் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY-U 2.0), 'கலைஞரின் கனவு இல்லம்' மூலம் நகர்ப்புற ஏழைகள், குறைந்த வருவாய் பிரிவினருக்கு மானியத்துடன் வீடுகள் கட்டப்படுகின்றன. 

ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் மத்திய மாநில அரசுக்கு வீட்டு வசதித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. சொந்த வீடு கட்டும் கனவில் இருக்கும் சாமானிய மக்கள் இந்தத் திட்டங்கள் மூலம் பயன் அடையலாம்.  இத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டும் கனவை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறி வழிவகுக்கின்றன. இந்த அரசுத் திட்டங்களில் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி? விண்ணப்பிக்கும் முறை, என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், எவ்வளவு மானியம் கிடைக்கும் என முழு விவரங்களையும் இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசின் 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0' (PMAY-U 2.0):

பெருநகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகள், நடுத்தர குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக, மத்திய அரசு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் 2.0 (PMAY-U 2.0) என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் இரண்டாம் கட்டமான இத்திட்டத்தில் ஒரு கோடி பயனாளிக்கு வீடு கட்டிக் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட் 9, 2024 அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், செப்டம்பர் 1, 2024 முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு வீட்டிற்கு ரூ.2.50 லட்சம் மானியத் தொகை கொடுக்கப்படும்.

நகர்ப்புற மேம்பாடு:

PMAY-U 2.0 திட்டம் நகர்ப்புறங்களில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அனைத்து வானிலைக்கும் ஏற்ற பக்காவான வீடுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. பயனாளிகள் தங்கள் தகுதியைப் பொறுத்து, PMAY-G அல்லது PMAY-U 2.0 இன் கீழ் நன்மைகளைப் பெறலாம்.

இந்தத் திட்டம், குடிசைவாசிகள், SC/ST சமூகங்கள், சிறுபான்மையினர், விதவைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற விளிம்புநிலை மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

PMAY-U 2.0 திட்டம் நான்கு பிரிவுகளைக் கொண்டது.

பயனாளி தலைமையிலான கட்டுமானம் (BLC)

கூட்டாண்மையில் மலிவு விலை வீடுகள் (AHP)

மலிவு விலை வாடகை வீடுகள் (ARH)

வட்டி மானியத் திட்டம் (ISS)

யார் விண்ணப்பிக்கலாம்?

நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் (EWS), குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் (LIG) அல்லது நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் (MIG), எந்தவொரு குடும்ப உறுப்பினரின் பெயரிலும் சொந்த வீடு இல்லாதவர்கள் மத்திய அரசின் மானியத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களாக வரையறுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் பிரிவுகளின் வருமான வரம்புகள் முறையே ரூ.6 லட்சம் மற்றும் ரூ.9 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் ஏதேனும் வீட்டுவசதித் திட்டத்தில் பயனடைந்த விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெற முடியாது.

தேவையான ஆவணங்கள் எவை?

தகுதியான பயனாளிகள் PMAY-U அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (pmay-urban.gov.in), பொது சேவை மையங்கள் (CSC) அல்லது அவற்றின் உள்ளூர் நகர்ப்புற அமைப்புகள்/நகராட்சிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தின் ஆதார் விவரங்கள், செயலில் உள்ள வங்கிக் கணக்குத் தகவல், வருமானச் சான்று, சாதி / சமூகச் சான்று மற்றும் நில ஆவணங்கள் தேவை.

தகுதியை சரிபார்க்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் விவரங்கள், வருமானம் மற்றும் பிற தகவல்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். தகுதியை உறுதிப்படுத்தியவுடன், தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பி, படிவத்தை சமர்ப்பிப்பிக்கலாம்.

நகர்ப்புற மேம்பாடு மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட, PMAY-U 2.0 இந்தியாவின் நகர்ப்புற வீட்டுவசதி நிலவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறு. லட்சக்கணக்கான சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் சொந்த வீடு கிடைப்பதை சாத்தியமாக்குகிறது.

பாகிஸ்தான் பரிதாபங்கள்! ஒரு சக்கரம் இல்லாமல் தரையிறங்கிய விமானம்!

தமிழக அரசின் 'கலைஞரின் கனவு இல்லம் திட்டம்':

வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வீடு கட்டித் தரப்படுகிறது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து, 2025-26ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட தமிழக பட்ஜெட்டில் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதை நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைத்து குடிசை வீடுகளையும், கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்துடன் குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களை மதிப்பீடு செய்வதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

யாருக்குக் கிடைக்கும்?

சொந்த இடம் உள்ள பயனாளிகளுக்கு முன்னிரிமை அடிப்படையில் வீடு கட்ட ஆணை வழங்கப்படும். பயனாளிகளின் சட்டபூர்வ வாரிசாக வாழும் குடும்பங்களும் பயன்பெற முடியும்.

ஒரு கிராமத்திலோ அல்லது குடியிருப்புகளிலோ குழுக்களாக பட்டா வழங்கப்பட்ட இடங்களில் தகுதியான நபர்களுக்கு செறிவூட்டல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். சொந்த நிலம் இல்லாத பயனாளிகளுக்கு, ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கி, வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பயனாகளின் தேர்வு செய்யப்படுவது எப்படி?

கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்ய, ஆண்டுதோறும் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தேர்வுக்குழு அமைக்கப்படும். இந்தக் குழு பயனாளிகளின் தகுதியை சரிபார்க்க  கள ஆய்வு நடத்தும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட நிதியாண்டில் கனவு இல்லம் திட்டத்தில் பயனடையத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வீட்டின் பரப்பளவு எவ்வளவு?

வீடுகட்ட குறைந்தபட்ச பரப்பளவு 360 சதுர அடியாக இருக்க வேண்டும். இதில் சமையலறையும் அடங்கியிருக்க வேண்டும். வீட்டில் 300 சதுர அடி காங்கிரீட் கூரை, மீதமுள்ள 60 சதுர அடி பயனாளியின் விருப்பப்படி எரியாத பொருள்கொண்ட மற்ற வகை கூரையாக அமைக்கலாம். ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்படும்.

பயனாளிகளுக்குத் தகுதி இருந்தால் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 கடன் பெறலாம். அல்லது கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க உதவி செய்யப்படும். கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.1.00 இலட்சம் வரை கடனுதவி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்றுத் தரப்படும்.

ரிசர்வ் வங்கிக்கு பிரிட்டன் விருது! டிஜிட்டல் வளர்ச்சி கண்டுபிடிப்புகளில் சாதனை!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?