டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனத்தை மிஞ்சி ஹெச்டிஎப்சி வங்கி நாட்டின் இரண்டாவது மதிப்பு மிக்க நிறுவனமாக மாறியுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி, அதன் நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சியை தன்னுடன் இணைப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை ஹெச்டிஎஃப்சி வங்கி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சந்தை மூலதனத்தில் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது.
வியாழன் வர்த்தகத்தின் முடிவில், ரூ.12,72,718.60 கோடி சந்தை மூலதனத்தை எட்டிய ஹெச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ் நிறுவனத்தின் ரூ.12,66,891.65 கோடி சந்தை மூலதன மதிப்பைத் தாண்டி முன்னேறியுள்ளது. எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் விலை மும்பை பங்குச்சந்தையில் 0.22 சதவீதம் உயர்ந்து ரூ.1,688.50 ஆக முடிந்தது.
ஒரு நாளைக்கு ரூ. 30 லட்சம்.. ரத்தன் டாடா குழுமத்தில் அதிக சம்பளம் வாங்கும் தமிழர்..
வர்த்தக நேரத்தின்போது இது 0.36 சதவீதம் வரை உயர்ந்து ரூ.1,690.95 ஆக இருந்தது. இருப்பினும், டிசிஎஸ் பங்குகள் 0.25 சதவீதம் சரிந்து ரூ.3,462.35 ஆக முடிந்தது. வர்த்தக நேரத்தின்போது 1 சதவீதம் வரை சரிந்து ரூ.3,436 ஆகக் குறைந்தது.
ஜூலை 1ஆம் தேதி, ஹெச்டிஎஃப்சி வங்கி தனது தாய் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி பைனான்ஸ் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது. 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த இணைப்பு இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தம், ஆகும்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.17,72,455.70 கோடி சந்தை மதிப்புடன் நாட்டின் நம்பர் ஒன் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி (ரூ. 6,96,538.85 கோடி) மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் (ரூ. 6,34,941.79 கோடி) ஆகிய நிறுவனங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
மொபைல் ஸ்கிரீன் பிரைட்னஸ் இவ்வளவு தான் வேண்டும்? உடனே டிஸ்பிளே செட்டிங்ஸை மாற்றுங்க
ஹெச்டிஎப்சி வங்கி, நாட்டின் மிகவும் மதிப்புமிக்க வங்கியாகவும் உள்ளது. அதைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி ரூ. 6,96,538.85 கோடி சந்தை மதிப்பீட்டையும், பாரத ஸ்டேட் வங்கி (ரூ. 5,44,356.70 கோடி) கொண்டிருக்கின்றன.
வியாழன் வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 474.46 புள்ளிகள் அல்லது 0.71 சதவீதம் உயர்ந்து 67,571.90 இல் நிலைத்தது. வர்த்தகத்தின் போது 521.73 புள்ளிகள் அல்லது 0.77 சதவீதம் உயர்ந்து 67,619.17 வரை அதிகரித்தது.