
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு குறி்த்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
7-வது ஊதியக் குழுவின்படி, சில்லரைப் பணவீக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசுஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை டிஏ, டிஆர் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் மார்ச் மாதம் 3 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் அடுத்ததாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் உயர்வு வரலாம்.
ஏப்ரல் மாதத்துக்கான சில்லரைப் பணவீக்கம் இந்த வாரத்தில் வெளியாகிறது. மார்ச் மாதத்துக்கான சில்லரைப் பணவீக்கம் 7சதவீதமாகவும், பிப்ரவரியில் 6.1 சதவீதமாகவும் இருந்தது. மார்ச் மாதம் உணவுப் பணவீக்கம் 7.68சதவீதமாக இருந்தது, இது பிப்ரவரியில் 5.85ஆகத்தான் இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி 34 சதவீதம் வழங்கப்படுகிறது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் கூடுதலாக 4 சதவீதம உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக உயரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக இருந்தது 34 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால் 50 லட்சத்துக்கும் மேலான மத்திய அரசுஊழியர்கள், 65 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதார்கள் பயன் பெற்றனர்.
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதம் என்ற அளவிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. அதை 28 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் 2021 அக்டோபர் மாதம் 3 சதவீதம் உயர்த்தி 31 சதவீதமாக அதிகரித்தது. 2022 மார்ச் மாதத்தில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 ஆக உயர்ந்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.