
கட்டண அதிகரிப்பு, புக்கிங் செய்த பயணத்தை ரத்து செய்தல் தொடர்பாக வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு உரிய கவனம் செலுத்துங்கள் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உபர், ஓலா நிறுவனங்களுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓலா, உபர் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் நியாயமற்ற வகையில் வர்த்தக செயல்முறைகளை கடைபிடிப்பது சரியல்ல. அவர்களி்ன் குறைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று மத்தியஅரசு எச்சரித்துள்ளது.
புகார்கள் அதிகரிப்பு
இது தொடர்பாக ஓலா, உபர் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சார்பில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் இரு நிறுவனங்கள் மீதும் வாடிக்கையாளர்கள், நுகர்வோர்கள் அளிக்கும் புகார்கள் அதிகரித்து வருகிறது, பயணத்தை முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்தல், கட்டணத்தை அதிகரித்து வாங்குதல் போன்றபுகார்கள் வருவது குறித்தும், அந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காதது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு ஓலா, உபர், மெரு, ரேபிடோ, ஜுக்னு ஆகிய நிறுவனங்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி இருந்தன
கடும் நடவடிக்கை
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில் “ உபர், ஓலா நிறுவனங்களுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார்கள் அதிகரித்து வருவது குறித்து பிரதிநிதிகளுடன் பேசினோம், அதற்குரிய புள்ளிவிவரங்களையும் வழங்கினோம்.
வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்திருந்தால், அவர்களை கட்டாயப்படுத்தி பயணத்தை ரத்து செய்ய வைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பயணத்தை ரத்து செய்தால், அவர்கள் அபராதம் செலுத்த வேண்டும். அதன் மூலம் இரு நிறுவனங்களும் லாபம் பார்க்கின்றன. ஆதலால், இரு நிறுவனங்களும் தங்களின் செயல்பாட்டு முறையை மேம்படுத்த வேண்டும், நுகர்வோர்கள் புகார்களுக்கு விரைவான தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கையை அரசிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது” எனத் தெரிவி்த்தார்
எச்சரிக்கை
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி காரே கூறுகையில் “ ஓலா, உபர் நிறுவனங்கள் உடனடியாக இந்தப் புகார்களுக்கு தீர்வு காண வேண்டும். இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் உரிமையை மீறக்கூடாது, நியாயமற்ற வர்த்தக முறைகளில் ஈடுபடக்கூடாது எனஅறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற செயல்பாடுகளை அரசு ஒருபோதும் பொறுக்காது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் இரு வேறுபட்ட நபர்களிடம் கட்டணமும் வெவ்வேறாக வாங்கப்படுவது ஏன். ஓலா, உபர் செயலிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்றும் ஆலோசிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.