பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் பங்குச் சந்தைகள் பெரும் திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. அடுத்தடுத்த அமர்வுகளில் பங்குச்சந்தை இறக்கம் கண்டு வருவதற்கு தேர்தலில் பாஜகவின் இறங்குமுகமே காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பங்குச் சந்தையை தேர்தலுடன் இணைக்கக்கூடாது. ஆனால் நிலையான அரசாங்கம் பங்குச் சந்தையை சிறப்பாக செயல்பட வழி வகுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு 16 முறை பெரிய திருத்தங்களைச் பங்குச்சந்தைகள் செய்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றி பெறுவதன் விளைவாக ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு சந்தை உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏழு கட்ட வாக்குப்பதிவு முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்பது கவனிக்கத்தகக்து.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் மாற்றம்: விளாடிமர் புடின் அதிரடி!
“பங்குச் சந்தை வீழ்ச்சிகளை தேர்தலுடன் இணைக்கக்கூடாது, ஆனால் இதுபோன்ற வதந்தி பரவியிருந்தாலும், ஜூன் 4 ஆம் தேதிக்கு முன் பங்குகளை வாங்குமாறு நான் பரிந்துரைக்கிறேன். அது கண்டிப்பாக ஏற்றம் காணும்.” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை தாண்டாதது குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்த அமித் ஷா, ஆனால் நிலையான அரசாங்கம் இருக்கும்போதெல்லாம் பங்குச் சந்தை சிறப்பாக செயல்படும் என்று குறிப்பிட்டார். “அதனால்தான் நாங்கள் 400-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறப் போகிறோம், நிலையான மோடி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என்று நான் சொல்கிறேன். எனவே, பங்குச் சந்தை நிச்சயமாக உயரும்.” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.