கட்டுமானத்தில் உள்ள பிளாட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன
நாம் அனைவருக்குமே சொந்த வீடு என்பது பெருங்கனவாகவே இருக்கும். இருப்பதற்கு ஒரு சொந்த வீடு வாங்கி விட்டால் போதும் என்று நிம்மதி பெருமூச்சு விடுவோர் அதிகம். அதுபோக வீடுகளில் முதலீடு செய்வோரும் ஏராளம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் ஒரு இடத்தை சொந்தமாக வாங்கி வீடு கட்டுவதை விட, பிளாட்டுகளை சொந்தமாக வாங்கவே விரும்புகிறார்கள். அதற்கு அங்குள்ள சமூக சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அதேசமயம், கட்டப்பட்ட பிளாட்களை வாங்குவதை விட கட்டுமான பணியில் இருக்கும் பிளாட்களை வாங்குவதற்கு நம்மில் பலரும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், எனினும், அப்படி ஒரு கட்டுமானத்தில் இருக்கும் பிளாட்டை வாங்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய பல முக்கியமான காரணிகள் உள்ளன. கட்டுமானத்தில் இருக்கும் தளத்தில் ஒரு பிளாட்டை முன்பதிவு செய்வது நல்ல யோசனையா இல்லையா என்பது, உங்களது பட்ஜெட், தேவை உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது.
வீடு வாங்குபவர்கள் எதற்காக கட்டுமானத்தில் உள்ள பிளாட்டுகளை வாங்குகிறார்கள்?
குறைந்த விலை: கட்டுமானத்தின் கீழ் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டப்பட்ட பிளாட்டுகளை விட விலை குறைவாக இருக்கும். கட்டுமானத்துக்கான முழு செலவும் செய்யப்படாததால், முடிக்கப்பட்ட அடுக்குமாடிகளைக் காட்டிலும் குறைவாகவே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வீடு வாங்குபவராக, பணத்தைச் சேமிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். குறிப்பாக, ஒரு பிரபலமான இடத்தில் அல்லது அதிக தேவை இருக்கும் இடத்தில் ஒரு பிளாட்டை இதுபோன்று வாங்கும் போது.
நெகிழ்வுத்தன்மை: கட்டுமானத்தில் இருக்கும் சொசைட்டியில் நீங்கள் ஒரு ஃப்ளாட்டை முன்பதிவு செய்யும் போது, உங்கள் பிளாட்டின் வடிவமைப்பு மற்றும் வண்ணப் பூச்சுகளை உங்கள் விருப்பப்படி செய்து கொள்ள முடியும். கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இது சாத்தியமில்லை. ஏனெனில் பில்டர் ஏற்கனவே அவரது விருப்பப்படி கட்டியிருப்பார்.
லாபம் ஈட்டலாம்: கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து அப்பகுதி வளர்ச்சியடையும் போது, உங்கள் பிளாட்டின் மதிப்பு காலப்போக்கில் உயரும். எதிர்காலத்தில் உங்கள் குடியிருப்பை விற்க முடிவு செய்தால் நீங்கள் நல்ல லாபம் ஈட்டலாம்.
தீமைகள் என்ன?
இருப்பினும், நன்மைகளைப் போலவே கட்டுமானத்தில் இருக்கும் பிளாட்டுகளை வாங்குவதில் ஆபத்துகளும் உள்ளன. கட்டுமானப் பணிகள் தாமதமாகும் அபாயம் உள்ளது. மோசமான வானிலை, பில்டரின் நிதி சிக்கல்கள் போன்ற பல காரணிகளால் கட்டுமானத்தில் தாமதம் ஏற்படலாம். இதனால், உங்கள் சொந்த வீட்டில் குடியேற ஆண்டுக்கணக்கில் ஆகலாம். தங்கள் கனவு இல்லங்களுக்காக பலரும் சட்டப் போராட்டங்களையும் நடத்தும் உதாரணங்கள் நம்முன்னே பல உள்ளன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: நாடாளுமன்றத்தை தெறிக்க விட்ட கனிமொழி எம்.பி.,!
ஒட்டுமொத்தமாக, கட்டுமானத்தில் உள்ள ஒரு பிளாட்டை முன்பதிவு செய்யலாமா வேண்டாமா என்பது தனிப்பட்ட முடிவு. ஒரு முடிவை எடுப்பதற்கு முன், நன்மை தீமைகளை கவனமாக எடைபோடுவது முக்கியம்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
பில்டரின் மதிப்பு: கட்டுமானத்தை மேற்கொள்ளும் பில்டரின் நற்பெயர் முந்தைய பணிகளை ஆராய வேண்டும். இதற்கு முன்பு அதே பில்டரிடம் பிளாட் வாங்கியவர்களிடம் பேசலாம். அவர்களுக்கு பில்டருடன் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் அல்லது தகராறுகள் உள்ளதா எனச் சரிபார்க்கலாம். அதேசமயம், பிரபலமான டெவலப்பர்கள் கூட சமீபத்திய ஆண்டுகளில் தோல்வியடைந்துள்ளதால், அவர்களின் பிராண்ட் என்ற ஒன்றை மட்டுமே பார்க்கக் கூடாது.
திட்ட ஒப்புதல் மற்றும் உரிமங்கள்: திட்டமானது உள்ளாட்சி மற்றும் அரசு அமைப்புகளிடமிருந்து தேவையான அனைத்து ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களைப் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். சுற்றுச்சூழல் அனுமதி, நில உரிமை மற்றும் நில பயன்பாட்டு அனுமதிகளை சரிபார்க்கவும்.
இருப்பிடம்: பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள், பொதுப் போக்குவரத்து போன்ற அணுகல்தன்மையை கவனிக்க வேண்டும். அப்பகுதியில் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டத்தின் இருப்பிடத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும், திட்டத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், தரை திட்டங்களை மதிப்பாய்வு செய்து அவை உங்கள் தேவைகளுக்குப் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும். திறந்தவெளிகள், வசதிகள் மற்றும் பசுமையான பகுதிகள் உள்ளதா என சரிபார்க்கவும்.
சட்ட அணுகல்: சட்ட நிபுணர் அல்லது வழக்கறிஞர் மூலம் சொத்து குறித்து சரி பார்க்கலாம். நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையைச் சரிபார்த்து, நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது தகராறுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
நிதி அம்சங்கள்: அடிப்படை விலை, பராமரிப்பு, பார்க்கிங் மற்றும் வரிகள் போன்ற கூடுதல் கட்டணங்கள் உட்பட மொத்தச் செலவைச் சரிபார்க்கவும். கட்டண அட்டவணையைப் புரிந்துகொண்டு, அது உங்கள் நிதித் திறனுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணம் செலுத்துதலில் தாமதம் ஏற்பட்டால் அபராதங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
கட்டுமான காலக்கெடு: கட்டுமானம் நிறைவு பெற எதிர்பார்க்கப்படும் தேதி. பில்டர் சரியான நேரத்தில் இதற்கு முந்தைய பிராஜட்களில் ஒப்படைந்துள்ளாரா? போன்றவற்றை பார்க்க வேண்டும்.
பில்டர்-வாங்குபவர் ஒப்பந்தம்: அனைத்து வகையான பில்டர்-வாங்குபவர் ஒப்பந்தத்தை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். இந்த ஆவணம் பில்டருடன் தொடர்பு கொள்ள அடிப்படையாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தை ஒரு ரியல் எஸ்டேட் நிபுணரை வைத்து படித்து தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஒப்பந்தத்தைப் பற்றிய புரிதல் உங்களுக்கு கிடைக்கும்.
தரம்: உங்கள் குடியிருப்பில் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்கள், சாதனங்கள் மற்றும் பூச்சுகளின் தரத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
கடன் ஒப்புதல்: வீட்டுக் கடனுக்கான திட்டமானது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். மேலும், பில்டருக்கு பணம் செலுத்துவதற்கான கட்டணத் திட்டம். வங்கிகளில் செலுத்தும் இஎம்ஐ, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதா? RERAஇல் திட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும்.
பராமரிப்புக் கட்டணங்கள்: பராமரிப்புக் கட்டணங்கள் மற்றும் அவை எவ்வாறு கணக்கிடப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த கட்டணங்கள் நியாயமானவையா? உங்கள் பட்ஜெட்டுக்குள் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும்.
சட்ட ஆவணமாக்கல்: விற்பனைப் பத்திரம், உடைமைக் கடிதம், ஆக்கிரமிப்புச் சான்றிதழ், நிறைவுச் சான்றிதழ் போன்ற அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களும் இறுதிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு முன் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். இந்த ஆவணங்களில் சில திட்டப்பணி முடிந்த பிறகுதான் வழங்கப்படும்.
ஆய்வு: சொத்தை உடைமையாக்கும் முன், ஏதேனும் குறைபாடுகள் அல்லது முடிக்கப்படாத வேலைகள் உள்ளதா என்பதை நேரடியாக சென்று முழுமையாக ஆய்வு செய்யுங்கள். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பில்டர் அதனை தீர்ப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.