விஸ்வகர்மா திட்டத்தில் மிகக் குறைந்த வட்டியில் கடன்! யாருக்குக் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

By SG BalanFirst Published Sep 20, 2023, 1:13 PM IST
Highlights

விஸ்வகர்மா திட்டத்தில் பதிவுசெய்தவர்களுக்கு விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை மூலம் அங்கீகாரம் வழங்கப்படும்.

பிரதமர் மோடி செப்டம்பர் 17 அன்று விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய தொழில்களைச் செய்துவருபவர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கான விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்தார். 18 பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த விஸ்வகர்மா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் ரூ. 13,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் எவ்வளவு கடன் வழங்கப்படுகிறது?

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியானவர்கள் விஸ்வகர்மா திட்ட இணையதளத்தில் பதிவுசெய்யவேண்டும். பொது சேவை மையங்கள் மூலம் இலவசமாகப் பதிவு செய்யலாம். பதிவுசெய்தவர்களுக்கு விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை மூலம் அங்கீகாரம் வழங்கப்படும். மேலும் பயிற்சி மற்றும் கருவித்தொகுப்புக்கான ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கான ஊக்கத்தொகையுடன் கூடுதலாக முதல் தவணையில் ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும். இரண்டாம் தவணையில் ரூ. 2 லட்சம் வரையான தொகையை 5% வட்டி விகிதத்தில் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

விஸ்வகர்மா திட்டத்திற்கு யார் தகுதியானவர்?

i) கைவினை கலைஞர், அல்லது பாரம்பரிய தொழில்களில் ஒன்றில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா துறையில் தொழிலாளராக இருக்கவேண்டும். இந்தத் தகுதி உள்ளவர்கள் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.  தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு திரிப்பவர்கள், பொம்மை செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூ கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், சுத்தியல் போன்ற கருவிகள் தயாரிப்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் என பல தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெற முடியும்.

ii) பதிவு செய்யும் நாளில் பயனாளியின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.

iii) பயனாளி பதிவு செய்யப்பட்ட தேதியில் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில், சுய தொழில் மேம்பாட்டிற்காக மத்திய அரசு அல்லது மாநில அரசின் கடன் சார்ந்த திட்டங்களின் கீழ் ஏற்கெனவே கடன் பெற்றிருக்கக் கூடாது. முத்ரா திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் கடன் பெற்றவராக இருக்கக் கூடாது.

iv) விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே பதிவு செய்து பயன்பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு, கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளைக் கொண்டது ஒரு ‘குடும்பம்’ என வரையறுக்கப்பட்டுள்ளது.

விஸ்வகர்மா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?

இத்திட்டத்தின் பலன்களைப் பெற விரும்பும் நபர்கள், www.pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

click me!