அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் இடையே நடந்த சர்ச்சைக்குப் பின்னர் உலகின் மிகப் பெரிய பணக்காரரான கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு செவ்வாய் அன்று மேலும் சரிந்து, உலகின் முதல் பத்து கோடீஸ்வரர் பட்டியலில் தனக்கான இடத்தை இழந்தார்.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி குழுமம் விரிவான பதிலை அளித்து இருந்த நிலையிலும், கடந்த வாரத்தில் இருந்து இந்தக் குழுமத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இத்துடன் புளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் லிஸ்டில் இருந்தும் 4வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டார். கடந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் அவரது சொத்து மதிப்பில் ஏறக்குறைய சுமார் 3 லட்சம் கோடியை இழந்துள்ளார்.
தற்போது இந்தியாவின் மற்றுமொரு பணக்காரரான முகேஷ் அம்பானியை விட ஒரு இடம் உயர்ந்த நிலையில் இருக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 82.2 பில்லியன் டாலராக உள்ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 84.4 பில்லியன் டாலராக இருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் அதானி குழுமத்தின் பங்குகளின் சரிவால் சுமார் 5.44 லட்சம் கோடி அளவிற்கு சந்தை மதிப்பு இறங்கி காணப்பட்டது. இந்த அளவிற்கு சந்தை மதிப்பு மற்றும் அதானி நிகர சொத்து மதிப்பு இறங்குவதற்கு காரணம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் அதானி குழும நிறுவனங்களின் மீதான குற்றச்சாட்டுகளாகும். அதானி குழுமம் தனது நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை அதிகரித்துக் காட்டியது, கணக்குகளில் மோசடி செய்தது என்று ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
undefined
கடந்த ஜனவரி 17 ஆம் தேதி, கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 124 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது அது 84.4 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதானி நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலும் அபுதாபியைச் சேர்ந்த சர்வதேச ஹோல்டிங் நிறுவனம் அதானி நிறுவனத்தில் 12,000 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் அபுதாபி ராயல் குடும்ப உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.