
ஐம்பது நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே கொண்டு இருக்கும் நிப்டியில் இன்று காலை 10.41 மணியளவில், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் விலை 35 சதவீதம் சரிந்து ரூ.1,017.45 ஆக இருந்தது. இதுவே பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத மோசமான இன்ட்ராடே வீழ்ச்சியாக கருதப்படுகிறது. 2022 டிசம்பரில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு உச்சத்தில், அதாவது ரூ.4,190 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில், தற்போது 76 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது. இது இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை
ஜனவரி 24 ஆம் தேதி முதல், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், அதானி குழுமம் சுமார் 117 பில்லியன் டாலர், அதாவது ரூ. 9.50 லட்சம் கோடி அளவிலான சந்தை மதிப்பை இழந்துள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கான மோசமான இழப்பாகும். இது இந்தக் குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட பாதியாகும்.
அதானி க்ரீன் எனர்ஜி:
கடந்த மூன்று அமர்வுகளில் அதானி எண்டர்பிரைசஸ் 60 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. அதானி க்ரீன் எனர்ஜி 51 சதவீதத்திற்கும் அதிகமாகவும், அதானி டோட்டல் கேஸ் 58 சதவிகிதத்திற்கும் மேலாகவும், அதானி டிரான்ஸ்மிஷன் ஜனவரி 24 முதல் 50 சதவிகிதத்திற்கும் மேலாக சரிவைக் கண்டுள்ளன.
Gautam Adani: கௌதம் அதானியின் அசுர வளர்ச்சியும் அதள பாதாள வீழ்ச்சியும்
அமெரிக்க வர்த்தகம்:
Short selling வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழும நிறுவனங்களில் அமெரிக்க வர்த்தகத்தின் மூலம் பத்திரங்கள் மற்றும் இந்திய வர்த்தகம் இல்லாத ஷார்ட் செல்லிங் வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
செயற்கையாக பங்கு விலை உயர்வு:
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு இருந்த குற்றச்சாட்டில், "முக்கிய பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்கள் கணிசமான கடனைப் பெற்றுள்ளன. கடன்களுக்காக அதானி குழுமத்தால் செயற்கையாக உயர்த்தப்பட்ட பங்குகளை அடகு வைத்து இருப்பதாகவும், இதனால், ஒட்டுமொத்த நிறுவனங்களும் ஆபத்தில் இருக்கின்றன'' என்றும் தெரிவித்து இருந்தது.
கூடுதல் கண்காணிப்பு:
அதானி எண்டர்பிரசைஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு நிலையற்று காணப்படுகிறது. இதனால், நிப்டி பிப்ரவரி 2 ஆம் தேதியன்று, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றை கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் (ASM)கீழ் கொண்டு வந்துள்ளது.
அம்புஜா சிமெண்ட்ஸ்:
இதற்கிடையில், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை பிப்ரவரி 3 ஆம் தேதி, அதாவது இன்று ஃபியூச்சர் அண்டு ஆப்ஷன் (F&O) தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்தப் பங்குகளின் மீது இந்த செக்டரில் இவற்றின் பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு நிலையற்று காணப்படுவதால் இந்த முடிவை நிப்டி எடுத்துள்ளது. இந்த நிலையில் கண்காணிப்பில் இருக்கும் அதானி எண்டர்பிரைசஸை விட இவற்றின் பங்கு மதிப்பு 5 முதல் 6 சதவீதம் குறைந்துள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.