மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏழு அம்சங்களை இந்த பட்ஜெட்டுக்கான அடிப்படைகளாகக் குறிப்பிட்டார்.
பசுமைப் பெருக்கம், இளைஞர்களின் ஆற்றல், ஒருங்கிணைந்த வளச்சி, நிதி ஆற்றல், கடைநிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, நாட்டின் வளங்களை சிறப்பாக பயன்டுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
undefined
கல்வித்துறைக்கு ரூ. 1,12,898.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மத்திய பட்ஜெட் வரலாற்றிலேயே அதிகமான ஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பள்ளிக்கல்விக்கு 68,804.85 கோடி ரூபாயும் உயர்கல்விக்கு 44,094.62 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.
சென்ற 2022-23 நிதி ஆண்டில் 1,04,277.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில் 40828.35 கோடி ரூபாய் உயர்கல்வித்துறைக்கும் 59052.78 கோடி ரூபாய் பள்ளிகல்வித்துறைக்கும் ஒதுக்கப்பட்டது.
ஏகலைவா மாதிரி பள்ளிக்கு 38,800 புதிய ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா 4.0 திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் உருவாக்க நிரல் எழுதுதல், ட்ரோன் தொழில்நுட்பம், 3டி பிரிண்டிங் போன்ற துறைகளுக்கான படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
5ஜி தொழில்நுட்ப வசதியுடன் மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கான நூறு மையங்கள் கல்வி நிறுவனங்களில் நிறுவப்படும். ஸ்மார்ட் வகுப்பறை, விவசாயம், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளில் பயன்படும் அப்ளிகேஷன்களை வடிவமைக்கப்படும்.
வைரக் கற்கள் இயற்கையாக உருவாகும் முறையிலேயே ஆய்வகங்களில் அவற்றை உருவாக்குவதை ஊக்குவிக்க ஏதேனும் ஒரு ஐஐடி நிறுவனத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நிதி உதவி செய்யப்படும். இத்திட்டம் எதிர்காலத்தில் வைரங்களை இறக்குமதி செய்வதைக் குறைக்கவும் வழிவகுக்கும். இந்த செயற்கை வைரங்களை தயாரிக்கும் செலவைக் குறைக்க அவற்றின் மீதான சுங்க வரி குறைக்கப்படும்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 36 சர்வதேச திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படிப்பை முடித்ததும் சர்வதேச நிறுவனங்களில் வேலையில் சேர்வதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உதவிகள் செய்யப்படும்.