90’s Kids- ன் திருமண தடைக்கு இந்த தோஷம் கூட காரணமாக இருக்கலாம்.. என்ன பரிகாரம்?

By Ramya s  |  First Published Aug 29, 2023, 10:31 AM IST

சூரியன் முதல் கேது வரை எந்த கிரகத்தினாலும் தோஷம் ஏற்படலாம். எனவே நமக்கு எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து பரிகாரம் செய்வது முக்கியம்.


ஒருவரின் ஜாதகத்தில் நவகிரகங்களின் ஆதிக்கம் என்பது முக்கியமானது. சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது என நவகிரங்கள் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள வீடுகளில் அமரும் நிலையை பொறுத்தே யோகங்களும் நன்மைகளும் ஏற்படும். அதே போல் நவகிரகங்கள் அமரும் நிலை சில தோஷங்களையும் ஏற்படுத்தும். குறிப்பாக செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், சுக்கிர தோஷம் போன்ற தோஷங்கள் திருமணம் போன்றவற்றில் தடையை ஏற்படுத்துகின்றன. சூரியன் முதல் கேது வரை எந்த கிரகத்தினாலும் தோஷம் ஏற்படலாம். எனவே நமக்கு எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து பரிகாரம் செய்வது முக்கியம்.

சூரிய தோஷம் :

Latest Videos

undefined

சூரியன் தந்தை வழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசியல் துறை அமைப்பு, உடல் ஆரோக்கியம் இதற்கெல்லாம் சூரியனின் அமைப்பு தான் காரணம். உங்கள் ஜாதகத்தில் சூரியனின் அமைப்பு மோசமான இடத்தில் இருந்தால் தந்தைவழி உறவுகளின் ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். தலை, கண்கள், வயிறு, பித்தம் அதிகரிப்பு போன்ற நோய்கள் ஏற்படும்ம். சூரிய தோஷத்தால் திருமணம் தாமதமாகலாம். சூரிய தோஷம் உள்ளவர்கள் அடிக்கடி ஹனுமன் கோயிலுக்கு செல்ல வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய உதயத்தின் போது வீட்டின் பூஜையறையில், பசு நெய் தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடலாம். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமை தவிடு வாங்கிக்கொடுக்கலாம்.

சந்திர தோஷம் :

சந்திரன் தாய்வழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக்கூடியது. தாயின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது, அம்மா வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வியில் தடை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஜாதக ரீதியிலோ அல்லது தசாபுத்தியிலோ உங்கள் சந்திர தோஷம் இருந்தால், திங்கள் கிழமைகளில் சூரிய உதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசும் நெய் விட்டு ஏற்றி வையுங்கள். அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு உங்களால் முடிந்த அளவு பச்சரிசி வாங்கிக்கொடுங்கள்.

திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு சென்று கைலாசநாதரையும், நவகிரக சந்திரனையும் வழிபடுங்கள். பௌர்ணமி நாளில் சந்திரன் ஒளி படும்படி கிரிவலம் செல்லவேண்டும்.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். சகோதரர்களின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். பூர்வீக சொத்து, நிலம் சம்மந்தப்பட்ட வழக்கு இழுபறியாக இருக்கும். கடன்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்த தொற்று நோய்கள், தலை சுற்றல், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஓரையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபடலாம். பழனி கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும். அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள்.

புதன் தோஷம்

புதன் கல்வி, கலைக்கு காரணமான கிரகம். எனவே புதன் தோஷம் இருந்தால் படிப்பு தடைபடுதல், கலைகளில் ஆர்வமின்மை, அடிக்கடி விபத்து, உடல் சம்மந்தமான குறைப்பாடு ஏற்படலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல், நரம்பு பிரச்சனைகள் போன்ற பிரச்சனை வரக்கூடும். புதன் தோஷம் உள்ளவர்கள், புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடலாம். பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம் அல்லது பால் பாயாசம் பிரசாதமாக வழங்கலாம். புதன்ஹோரையில் பசுநெய் அகல் தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடலாம். நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது.

குரு தோஷம்:

குரு தோஷம் ஏற்பட்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பிள்ளைகளுடன் அடிக்கடி பிரச்சனை ஏற்படும், குழந்தைகளால் பிரிவு ஏற்படும். குரு தோஷத்தால் படிப்பில் ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பை கோளாறுகள், வயிறு உபாதை, தலை சுற்றல் ஏற்படலாம். வியாழன் ஹோரையில் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். திருச்செந்தூர் சென்று மனதார வழிபட்டு வாருங்கள். அருகில் உள்ள கோயில்களில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சுக்ர தோஷம் :

கணவன் மனைவி உறவுக்கு காரணமான கிரகம் சுக்கிரன். சுக்கிரன் அமைப்பு சரியில்லை எனில் குடும்ப உறவுகளிடையே விரிசல் ஏற்படும். மனக்கசப்பு உண்டாகும். புதுவாகன யோகம் கிடைக்காது. முதுகுத்தண்டு பிரச்சனை, கல்லீரல், சிறுநீரகக்கல் பிரச்சனை ஏற்படும். சுக்ர தோஷம் உள்ளவர்கள் சுக்ர ஹோரையில், வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடலாம். குலதெய்வம் அல்லது ஸ்ரீரங்கநாதரை வழிபட்டால் தோஷம் நீங்கும். நவகிரக சன்னதி, சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்ய நன்மைகள் கிடைக்கும்.

சனி தோஷம் :

சனி பகவான் நீதிமானாக செயல்படுகிறார். சனி தோஷம் ஏற்பட்டால் முன்னேற்றத்தில் தடை, அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல் பல பிரச்சனைகளில் ஏற்படலாம். நரம்பு பிரச்சனை, வாத நோய், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனை ஏற்படலாம். சனிஹோரையில் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று சனி பகவானை வழிபடலாம்.

ராகு தோஷம் :

ராகுவின் அமைப்பு பாதிக்கப்பட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் பெற தடை, புகழுக்கு களங்கம், மன விரக்தி, குடும்ப பிரிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ராகு தோஷம் உள்ளவர்கள், ராகுகாலத்தில் துர்க்கையை வழிபடலாம். திருநாகேஸ்வரம் கோயிலுக்கு சென்று ராகுவையும், திருப்பாம்பரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சென்று நாகரை தரிசித்துவிட்டு வாருங்கள்.

கேது தோஷம் :

ஜாதகத்தில் கேது தோஷம் இருந்தால் படிப்பு தடைபடுதல், சொத்து பிரச்சனை, மன விரக்தி, ஏமாற்றம், கூடா நட்பு, வீண் சண்டை சச்சரவு ஏற்படலாம். செவ்வாய் கிழமை சூரிய உதயத்தில் 5 தீபங்களை ஏற்றி வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும். விநாயகர் கோயிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிள்ளையார்பட்டி என்று விநாயகரை வழிபட்டு வாருங்கள். கீழ்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலுக்கு சென்று, அங்குள்ள கேது பகவானை வழிபடலாம். இயன்ற அளவு தானம் செய்தால் தோஷம் நீங்கி நன்மை கிடைக்கும்.

click me!